Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது விமானப்படையின் கைகள் கட்டப்பட்டதா..? ராகுலின் குற்றச்சாட்டை விமர்சித்த ஒன்றிய அமைச்சர்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது விமானப்படைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக விமானப்படை தலைமை தளபதி கூறிய நிலையில், ராகுல் காந்தியை பாஜக கடுமையாக சாடி வருவதால் பெரும் அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்க வேண்டாம் என இந்திய விமானப்படைக்கு ஒன்றிய அரசு கூறியதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விமானப்படை தலைமை தளபதி அமர் பிரீத் சிங் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர், ‘மிகவும் வெளிப்படையாக ஒன்றை இங்கே பேசுகிறேன். ஏனென்றால் இதுகுறித்து பலவிதமான கருத்துக்களை கேட்கிறேன். நான் சொல்வதை மக்கள் நம்ப வேண்டும். மிகத் தெளிவான அரசியல் உறுதிபாடு மற்றும் வழிக்காட்டல் எங்களுக்கு இருந்தது.

எங்கள் மீது எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மேலும், இந்த நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் ஆறு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஏதேனும் உங்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்ததா? நீங்கள் கட்டுப்படுத்தப்பட்டீர்களா? எனப் பலர் பேசுகிறார்கள்; கேட்கிறார்கள். அவை சுயமாக உருவாக்கப்பட்டவை. எதிரி உடனான மோதல் விதிகளை நாங்களே முடிவு செய்தோம். எங்களுக்குள் எழும் பதற்றத்தை எப்படி கையாள்வது என்பதை நாங்களே முடிவு செய்தோம். எனவே, நான் மிகவும் தெளிவாகக் கூற விரும்புகிறேன்; எங்கள் மீது எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. திட்டமிட்டு செயல்படுத்த முழு சுதந்திரம் வழங்கப்பட்டது’ என்றார்.

விமானப்படை தளபதியின் இந்த கருத்துக்கள் குறித்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில்,

‘நீங்கள் (ராகுல்காந்தி) ஏன் தொடர்ந்து பொய் சொல்கிறீர்கள்? நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை நீங்கள் பேண வேண்டும். உங்கள் தகுதியை நீங்களே குறைத்துக்கொண்டது மட்டுமல்லாமல், நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவித்துள்ளீர்கள்’ என்று கூறினார். மேலும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், ‘விமானப்படை தளபதியின் கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியை வெட்கப்பட வைக்க வேண்டும். முதலில் அவர்கள் இந்தியாவின் இழப்புகள் குறித்து பொய்களைப் பரப்பினர். இரண்டாவதாக, இந்தியப் படைகளின் செயல்பாட்டுத் திறனுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்ததாக தவறான தகவல் பிரசாரத்தை நடத்தினர்.

அதுவும் இப்போது முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளது’ என்றார். இந்நிலையில், விமானப்படை தளபதியின் கருத்துக்களுக்குப் பிறகு, காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களில் கடும் அமைதி நிலவுவதாக பாஜக மூத்த தலைவர் அமித் மால்வியா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ‘விமானப் படை தளபதியின் கருத்துக்கள் மூலம், எதிர்க்கட்சித் தலைவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பகத்தன்மையும் இப்போது சிதைந்துவிட்டது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.