நாமக்கல்லில் தவெக தலைவர் நடிகர் விஜய் நேற்று பிரசாரம் செய்தபோது, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த மறைந்த சுப்பராயனுக்கு, இடஒதுக்கீடு உறுதியை வழங்கியதில் மிகப்பெரிய பங்கு உண்டு. அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை என கூறினார். உண்மையில், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் சுப்பராயனுக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்து விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தனது சமூக வலைத்தளம் பதிவில், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் ப.சுப்பராயனுக்கு நாமக்கலில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என ‘கீச்சி’ ட்டுள்ளார். கடந்த 2024 மே மாதம் நாமக்கல் மாவட்டம், தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் ப.சுப்பராயனுக்கு நினைவரங்கம் கட்டும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கடந்த ஓராண்டாக இதன் கட்டுமானப் பணி நடந்து வந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல நாமக்கல் முட்டைக்கு பெயர் பெற்ற ஊர். முட்டைக்கு சேமிப்பு கிடங்கு கட்டப்படவில்லை என விஜய் கூறினார். ஆனால், முட்டையை சேமித்து வைப்பதற்காக, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தனியார் பங்களிப்பு மற்றும் அரசு மானியத்துடன் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* தப்பு... தப்பா பேசிவிட்டு சாரி கேட்ட விஜய்
தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையை வழங்கின இதே நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருச்செங்கோடு பகுதியில் இருக்கிற ஒருத்தர்... நம்முடைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சுப்பராயன் என்றார். சென்னை மாகாணம் என்பதற்கு பதில் சென்னை மகாணம் என்று தவறுதலாக வாசித்தார். இதேபோல் உணர்ச்சியூட்ற ‘மண்ணும்’ என்பதற்கு பதில் ‘மட்டும்’ என்றும், அமைக்கணும் என்பதற்கு பதில் ‘அமைக்கிக்கணும்’ என்றும், ‘கொள்முதல் நிலையங்கள்’ என்பதற்கு பதில் ‘கொள்முதல் திலையங்கள்’ என்றும், பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு பதில் ‘பாடிதிக்கப்பட்டுள்ளனர்’ என்றும், தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்பதற்கு பதில் செல்வோம் என்றும், ஒத்தையடி பாதை போடப்படும் என்பதற்கு பதில் ‘ ேபாதப்படும்’ என்றும், டிவிகே ஆட்சி இன்றைக்கு அமைக்கணுமா? என்பதற்கு பதில் ‘மீண்டும் ஆட்சி அமைக்கணுமா? என்றும் விஜய், பேப்பரை பார்த்தும் சரியாக படிக்காதது சர்ச்சையை கிளப்பியது. இதை உணர்ந்தவர் உரையை முடித்த பின்பு, சாரி நான் பேசும் சத்தமும், இங்கு ஒலிக்கும் சத்தமும் சற்று முன்பின் வித்தியாசமாக இருந்தது. ரிதமை பிடிக்க சற்றுநேரமாகிவிட்டது என்று மன்னிப்பு கேட்டார். 15 நிமிட பேச்சில் விஜய் 3 முறை ‘சாரி’ கேட்டது குறிப்பிடத்தக்கது.
* விஜயகாந்த் இல்லை... ராமலிங்கம் பிள்ளை...
விஜய் பேசும்போது, நாமக்கல் சத்தான முட்டை கொடுக்கின்ற ஊர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சிகளை ஊட்டுகின்ற மண்ணும் கூட. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று நம்முடைய நாடி நரம்புகளில் ரத்தம் பாய்ச்சுகின்ற இந்த வரிகளை எழுதினது யார் என்று தெரியுமல்லவா என்று கேள்வி எழுப்பினார். அப்போது தொண்டர்கள், விஜயகாந்த் என்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட விஜய், ‘‘விஜயகாந்துக்கு மட்டுமல்ல. நம் அனைவருக்கும் இந்த வரிகளை எழுதியது நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்று திருத்தினார். அதேநேரத்தில் அவர் பிறந்தது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மேகனூர் என்றார். தொண்டர்களை திருத்திய விஜய், மோகனூரை மேகனூர் என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
* தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய தவெகவினர்
நாமக்கல்-சேலம் ரோடு கேஎஸ் தியேட்டர் அருகில், டாக்டர் சியாமளா என்பவர் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். நேற்று அப்பகுதியில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசாரம் செய்ததால், பாதுகாப்பு கருதி கிளினிக் மூடப்பட்டது. இந்நிலையில், பிரசாரத்திற்கு வந்த தவெக கட்சி தொண்டர்கள், விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் மருத்துவமனை கட்டிடத்தின் மேல் பகுதியில் ஏறினர். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், மருத்துவமனையில் இருந்த மெகா டிஜிட்டல் போர்டு அடித்து நொறுக்கப்பட்டது. மின் இணைப்புகள் அறுத்து எறியப்பட்டது. மேலும், மருத்துவமனையில் இருந்த கண்ணாடி கதவுகளையும், தவெகவினர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரசார பரபரப்பு ஓய்ந்ததும், நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்த டாக்டர் சியாமளா, பொருட்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள சேதமதிப்பு ரூ.5 லட்சம். விஜய் பிரசாரத்திற்கு வந்தவர்களால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்ய உள்ளேன்,’ என்றார்.
* ஆம்புலன்சில் தண்ணீர் பாட்டில்கள் விநியோகம்
நடிகர் விஜய் பிரசாரத்திற்காக காலையிலேயே பெண்கள், சிறுவர், சிறுமிகள் என பலரும் வந்து கடும் வெயிலில் காத்திருந்தனர். அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் குடிநீர் கூடவாங்க முடியாமல் சுட்டெரிக்கும் வெயிலில் தவித்தனர். பலர் மூடப்பட்ட கடைகளின் ஓரம் நிழலை தேடி ஓடினர்.பலர் தாகத்தில் தவித்தனர். இதனிடையே ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவக்குழு என ஸ்டிக்கர் ஒட்டியபடி சைரன் ஒலித்தபடி தொண்டர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. அந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது வாகனத்தில் யாரும் இல்லை. தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே இருந்தன. இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
* செய்தியாளர்களை சந்திக்க பயமா? நிருபர்கள் கேள்வி வேகமாக சென்ற விஜய்
தவெக தொடங்கியதில் இருந்தே நடிகர் விஜய் நிருபர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். பிரசார பயணம் தொடங்கியபோதும் நிருபர்கள் பேட்டி கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் சென்றார். 2 முறை சனிக்கிழமை பிரசாரத்துக்காக திருச்சி விமான நிலையத்துக்கு வந்தபோதும், பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது, கண்ணாடியை மூடிவிட்டு சென்றார். இந்நிலையில் 3வது சனிக்கிழமை பிரசாரத்துக்காக விஜய் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை 9.30 மணிக்கு திருச்சி வந்தார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக காலையில் இருந்தே பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய், பத்திரிகையாளர்களை பார்த்ததும் அவர்களது அருகில் செல்லாமல் நேராக கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு சென்றார். அப்போது பத்திரிகையாளர்கள், சார் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என்கிறீர்கள். அச்சப்படுகிறீர்களா?.. எனக் கேள்வி கேட்டனர். ஆனால் அவர் எதையும் கண்டு கொள்ளாமல் விறுவிறுவென காரில் ஏற சென்றார். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சார்... சார்... என பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் அவர் காரில் ஏறி வேகமாக சென்று விட்டார்.
* நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி அது தெரியாமல் பேசும் விஜய்
ஒன்றிய அரசு, சமீபத்தில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தது. அது எந்த அளவில் முன்னேற்றத்தில் உள்ளது என்ற புள்ளி விபரத்தையும் வெளியிட்டது. அதன் அடிப்படையில் இந்திய அளவில் தமிழகம் 13 துறைகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னணியில் உள்ளது. இதில் தேசிய சராசரியை விட, தமிழகத்தின் மதிப்பெண் அதிகமாக உள்ளது. சுத்தமான குடிநீர், சுகாதாரம், உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, கல்வியில் முன்னேற்றம், காலநிலை நடவடிக்ைககளில் தேசிய சராசரியின் 61 புள்ளிகளை தாண்டி 76 புள்ளிகளை பெற்று முன்னிலையில் உள்ளது. இதை அறியாமல் விஜய், தமிழ்நாட்டில் சாலை, குடிநீர், சுகாதார வசதிகள் முழுமையாக இல்லை என்று நாமக்கல் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அரசின் செயல்பாடுகள் குறித்து எதுவும் அறியாத விஜய், பொத்தாம் பொதுவாக மக்களிடம் பொய் பேசக்கூடாது என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
* அடிச்சு விடுவோமா? சீமான் மீது அட்டாக்
புதிய கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் கொள்கை என்ன என்பது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி வருகிறார். புதிதாக அவர் என்ன செய்ய போகிறார் என்றும் தொடர்ந்து கேட்டு வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்றைய கூட்டத்தில் விஜய் பேசுகையில், ‘‘ஐயா அரசியல் மேதாவிகளே. படிப்பதற்கு நல்ல கல்வியும், குடிப்பதற்கு நல்ல குடிநீரும், மருத்துவ வசதியும் வேணும் என்று நான் போகும் இடத்தில் எல்லாம் மக்கள் கேக்குறாங்க. அப்புறம் அதை சரியாக செய்வோம் என்று சொல்வது தானே சரி. அதை விட்டு விட்டு புதுசா சொல்லுங்க, புதுசா சொல்லுங்கன்னு சிலர் கேட்குறாங்க. புதுசா என்னப்பா சொல்றது. செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காற்றில் கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை போடப்படும், வீட்டுக்குள் ஏரோபிளேன் ஓட்டப்படும் என்று சிலரை போல் நாமும் அடித்து விடுவோமா’’ என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக அட்டாக் செய்தார் விஜய்.