ரூ.60 கோடியில் தர்மசத்திரம் திறப்பு; கங்கையில் நீராடிய பிறகே சைவத்துக்கு மாறினேன்: வாரணாசியில் துணை ஜனாதிபதி பேச்சு
வாரணாசி: காசி மற்றும் தமிழகம் இடையேயான பல்லாயிரம் ஆண்டு கால ஆன்மிக, கலாசார உறவை வலுப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய தர்மசத்திரத்தை துணை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கின் ஆன்மிகப் பிணைப்பிற்குச் சான்றாக, ராமேஸ்வரத்தில் ராமர் ஜோதிர்லிங்கமும், காசியில் விஸ்வநாதர் ஜோதிர்லிங்கமும் திகழ்கின்றன. ஆதிசங்கரரால் மேலும் வலுப்பெற்ற இந்த உறவின் புதிய அத்தியாயமாக, காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம் மேலாண்மை சங்கம் சார்பில், காசியில் ரூ.60 கோடி செலவில் பத்து மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட தர்மசத்திரம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தனர்.
விழாவில் பேசிய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், ‘தர்மத்திற்கு தற்காலிகமாக சோதனைகள் வரலாம், ஆனால் அது ஒருபோதும் நிரந்தரமாகாது. எத்தனையோ சோதனைகளைக் கடந்தாலும், இறுதியில் தர்மமே வென்றுள்ளது என்பதற்கு இந்த தர்மசத்திர கட்டிடம் ஒரு சான்றாகும்’ என்று குறிப்பிட்டார்.
மேலும் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், ‘சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு காசிக்கு வந்தபோது, நான் அசைவ உணவுப் பழக்கம் கொண்டிருந்தேன். 2000ம் ஆண்டில் இங்கு கங்கையில் நீராடிய பிறகே சைவமாக மாறினேன். அந்த மாற்றம் எனக்குள் காசியில்தான் நிகழ்ந்தது. அதன்பிறகு 2014ல் பிரதமர் மோடிக்காகப் பிரசாரம் செய்ய வந்தேன். அன்று நான் கண்ட காசிக்கும், இன்றைய காசிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. சாத்தியமற்றது என்று தோன்றிய இந்த மாபெரும் மாற்றம், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற கர்மயோகிகளால் மட்டுமே சாத்தியமானது’ என்றார்.
