Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது யாருடன் சந்திப்பு, பேச்சு என்பது சஸ்பென்ஸ்: மனம் திறக்க மறுக்கும் செங்கோட்டையன்

கோபி: ‘‘எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது. யாருடன் சந்திப்பு, பேச்சு என்பது சஸ்பென்ஸ்’’ என்று செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டு ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீலகிரி பிரசாரத்துக்கு செல்லும் வழியில் கோபியில் எடப்பாடிக்கு வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் செங்கோட்டையன் கோபியில் இருந்து ரகசியமாக வெளியேறி சென்னைக்கு சென்றுவிட்டார். அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் சென்ற செங்கோட்டையன் அவருடன் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் செங்கோட்டையன் நேற்று காலை சென்னையில் இருந்து கோபிக்கு திரும்பினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் சிகிச்சை பெற்று வரும் எனது மனைவியை பார்க்க சென்றேன்.

அங்கு சென்றவுடன் எனது சொந்த வேலையை பார்த்துவிட்டு வீடு திரும்பினேன். அரசியல் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் நான் யாரையும் சந்திக்கவில்லை. என்னை பொறுத்தவரையில் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் இருக்கிறது. எனது குறிக்கோள் ஒன்றுதான், அந்த குறிக்கோளின் அடிப்படையில் யாரையும் சந்திக்கவில்லை. அரசியல் ரீதியாக யாரிடத்திலும் நான் பேசவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஒருங்கிணைப்பு பணி குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘‘பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள். ஒருமித்த கருத்துகள் அவர்கள் மனதில் இருக்கிறது. யார் என்னிடத்தில் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை தற்போது நான் கூற இயலாது. ஆகவே, எல்லோருடைய உள்ளங்களிலும் இருப்பது அதுதான். இன்று வரை நான் சொன்ன கருத்துக்களுக்கு ‘‘நெகட்டிவ் கமெண்ட்ஸ்’’ யாரிடத்தில் இருந்தும் வரவில்லை. எல்லோருடைய மனதிலும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை இருக்கிறது. ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்பு கொண்டார்களா? என்பதை சொல்வது சரியாக இருக்காது. யார் பேசினார்கள், யார் பேசவில்லை என்பதை இப்போது சொல்வதற்கு வாய்ப்பு இல்லை’’ என்றார். ‘தேர்தலுக்கு முன் ஒருங்கிணைப்பு பணி முடியுமா?’ என்ற கேள்விக்கு, ‘‘நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை. வாய்ப்பு இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்’’ என்றார்.