அதிருப்தி தலைவர்களை இழுக்க செங்கோட்டையன் திட்டம்; ஓ.பன்னீர்செல்வம், டிடிவி ஆதரவாளர்களை இழுக்க எடப்பாடி அதிரடி உத்தரவு: அதிமுகவில் பரபரப்பு
சென்னை: அதிருப்தி தலைவர்களை இழுக்க செங்கோட்டையன் திட்டம் வகுத்துள்ளநிலையில், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி ஆதரவாளர்களை இழுக்க எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் அதிமுகவில் பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு, கட்சி பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதே பல தோல்விகளை அக்கட்சி சந்தித்தது. தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் அதிமுக பல கூறுகளாக பிரிந்து கிடக்கிறது. டிடிவி தினகரன் தனியாக அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வமோ, ‘‘தொண்டர்கள் உரிமை மீட்பு இயக்கம்’’ என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். அவர், தனது அமைப்பை டிசம்பர் 15ம் தேதிக்குப் பிறகு கட்சியாக நடத்த முடிவு செய்துள்ளார்.
இந்தநிலையில் மேற்கு மாவட்டத்தில் செல்வாக்காக இருந்த செங்கோட்டையன், பாஜக தலைவர்களின் பேச்சைக்கேட்டு, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக கூட்டணிக்கு சம்மதித்தவுடன், பாஜக மேலிடம் செங்கோட்டையனை கழட்டி விட்டு விட்டது. இதனால் அவர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்தார். இதனால் அவர் அவர்களுடன் அணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்துக்கும், செங்கோட்டையனுக்கும் ஆகாது. ஜெயலலிதாவிடம், ஓ.பன்னீர்செல்வத்தைப் பற்றி, செங்கோட்டையன் போட்டுக் கொடுத்ததால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஓபிஎஸ் இழந்தார். இதனால் ஜெயலலிதா இருக்கும்போது இருவருக்கும் ஆகாது. தற்போதும் அவர்கள் எடப்பாடியை எதிர்க்கவே ஒன்று சேர்ந்தார்கள். இந்தநிலையில், அவர் நடிகர் விஜயை சந்தித்து தவெகவில் இணைய அவர் திட்டமிட்டுள்ளார்.
இன்று அவர் விஜயை ரகசியமாக சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். அவர் தனது ஆதரவாளர்கள் 30 பேரும் கட்சியில் இணைகிறார். மேலும், கட்சியில் இணைந்த பிறகு அதிமுகவில் அதிருப்தியில் உள்ள குறிப்பாக ஊட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், கோவையில் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட பல தலைவர்களிடம் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சில முன்னாள் எம்எல்ஏக்களுடனும் அவர் பேசி வருகிறார். அவர்களை தவெகவில் இணைக்க அவர் திட்டமிட்டு, நிர்வாகிகளை இழுக்கும் வேலைகளை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு விஜயும் பச்சை கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் உள்ள சில மூத்த தலைவர்களை இழுக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வைத்திலிங்கம் உள்ளிட்ட தலைவர்களை இழுக்க உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூக தலைவர்களை இழுக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் அதற்கான பணிகளை அதிமுக நிர்வாகிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆள் இழுக்கும் படலத்தால் அதிமுகவில் பரபரப்பு எழுந்துள்ளது.
எம்எல்ஏ பதவி ராஜினாமா
தவெகவில் நாளை இணைய உள்ள செங்கோட்டையன் இன்று காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகம் வந்தார். பின்னர் 11.45 மணிக்கு சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தார். அப்போது தயாராக கொண்டு வந்திருந்த கோபிச்செட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அவர் கொடுத்தார். தவெகவில் சேருவதால், அதிமுக சார்பில் வென்ற தனது பதவியை அவர் ராஜினாமா செய்வதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


