சென்னை: சென்னை தி.நகரில் பாஜ சார்பில் நேற்று சேவை வாரம் கொண்டாடப்பட்டது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாநில துணைத்தலைவர்கள் சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, மாவட்ட தலைவர் கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
அடுத்த மாதம் 2ம் தேதி வரை வீடு தோறும் கொடி ஏற்ற வேண்டும் என்று எல்லா மக்களிடமும் எடுத்துக்கூற இருக்கிறோம். பிரதமர் மோடி கைவினைப் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் அடையாளமாகவே கைவினைப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை பண்ணியவர் எங்கள் பிரதமர். பாஜவின் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் உண்டு.
எங்களது கட்சியின் துணைத் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு அளித்திருக்கிறார்கள். பாஜ வாக்கு திருட்டு செய்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் என்பது ஒரு தனிப்பட்ட செயல்பாடு கொண்டதாகும். இவ்வாறு அவர் கூறினார். பாஜக கூட்டணிக்கு மீண்டும் வருமாறு ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நயினார் நாகேந்திரன்,‘‘அதுபற்றி பின்னர் பேசலாம்” என்றார்.