ஊட்டி: ஊட்டி-சோலூர் செல்லும் சாலையோரத்தில் வளர்ந்துள்ள ராட்சத பைன் மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலை ஓரங்களில், பள்ளி வளாகம் மற்றும் அரசு துறை அலுவலகங்கள், புல் மைதானங்களில் கற்பூரம் மற்றும் பைன் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
சாலையோரங்களில் வைக்கப்பட்ட இந்த மரங்கள் தற்போது இருபுறமும் நெடுநெடு என வளர்ந்துள்ளன. பருவ மழை காலங்களில் காற்று வீசும் போது இந்த மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஊட்டியில் இருந்து சோலூர் செல்லும் சாலையில் 7வது மைல் பகுதியில் இருந்து சொமர்டேல் பகுதி வரை சுமார் ஒரு 1 கி.மீ தூரம் சாலையின் இருபுறங்களிலும் பைன் மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இவைகளில் சில மரங்கள் சாலையில் தொங்கிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் மழைக்காலங்களில் இந்த மரங்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வடகிழக்கு பருவமழை கூடிய விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மழை தீவிரம் அடையும் முன் ஊட்டி-சோலூர் சாலையில் 7வது மைல் பகுதி முதல் சொமர்டேல் பகுதி வரை சாலை ஓரங்களில் உள்ள விபத்து அபாயம் உள்ள பைன் மரங்களை அகற்ற வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.