ஊட்டி: ஊட்டி அருகே பெர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துள்ள ஜெரோனியம் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடக மாநிலம் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில், பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் சீசன் என்பதால், இங்குள்ள பசுமை குடிலில் பல்வேறு வகையான மலர் செடிகள் தொட்டிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்த பசுமை குடிலில் பல வண்ணங்களை கொண்ட ஜெரோனியம் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது சிவப்பு, வெள்ளை, ஊதா உள்ளிட்ட பல வண்ணங்களில் ஜெரோனியம் மலர்கள் பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமின்றி அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.