ஊட்டி : ஊட்டியில் இருந்து பார்சன்ஸ்வேலி செல்லும் சாலை பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் பார்சன்ஸ்வேலி பகுதி அமைந்துள்ளது.
நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட இப்பகுதியில் 6-க்கும் மேற்பட்ட தோடர் பழங்குடியின கிராமங்கள் உள்ளன. பார்சன்ஸ்வேலி பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர பார்சன்ஸ்வேலி அணை ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், மின் உற்பத்திக்கு ஆதாரமாகவும் உள்ளது. இப்பகுதியில் மின்வாரிய குடியிருப்பு உள்ளிட்டவைகள் உள்ளன.
ஊட்டியில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி தீட்டுக்கல் அருகே இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி நிலைய பகுதியில் இருந்து நகராட்சி குப்பை குழி வரை சுமார் 2 கிமீ தூரத்திற்கு சாலை மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும் மழை காரணமாக சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. இதில் அரசு பஸ்கள், காய்கறி பாரம் ஏற்றி செல்லும் லாரிகள், குப்பை குழிக்கு செல்லும் நகராட்சி வாகனங்கள் உள்ளிட்டவை அடிக்கடி சென்று வந்ததால் அவை பெரிய அளவில் பள்ளங்களாக மாறி உள்ளன. பல இடங்களில் சாலையே இல்லாத அளவிற்கு ஆளை விழுங்கும் அளவிற்கு பெரிய பெரிய பள்ளங்களாக உள்ளன.
இப்பள்ளங்களில் மழை நீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. கார் உள்ளிட்ட சிறு வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே பழுதடைந்த சாலையை விரைவில் சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.