Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஊட்டி-மஞ்சூர் சாலையில் மண் சரிவை தடுக்க சாயில் நெய்லிங் முறையில் புற்கள் வளர்க்கும் திட்டம் துவக்கம்

*இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பானது என நெடுஞ்சாலைத்துறையினர் தகவல்

ஊட்டி : ஊட்டி-மஞ்சூர் சாலையில் கீழ் கைகாட்டி பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்ட செங்குத்தான பகுதியில் மண் சரிவு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சாயில் நெய்லிங் பொருத்தி ஹைட்ரோ சீடிங் தொழில்நுட்பத்தில் புற்கள் வளர்க்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சமயங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் மழை உள்ளிட்டவற்றால் பேரிடர்கள் ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளாக 284 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றில் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 68 இடங்களும், அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 89 இடங்களும், மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 79 மற்றும் குறைந்த பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 48 என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் நெடுஞ்சாலைதுறைக்குட்பட்ட பகுதிகளில் 49 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

வழக்கமாக சாலைகளில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் தடுப்பு சுவர்கள் கட்டப்படுகின்றன. இதனால் அதிக செலவு ஏற்படுகிறது. தற்ேபாதைய சூழலில் பருவநிலை மாற்றம் மற்றும் எதிர்பாராத அதி கனமழை போன்ற காரணங்களால் நீர்வழிபாதைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. மேலும் தடுப்புசுவர் கட்டுவதாலும் முழுமையாக தீர்வு காண முடிவதில்லை.

இந்நிலையில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அதனை தடுக்கும் நோக்கில் சோதனை முயற்சியாக தமிழகத்திலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதியில் மண்ணில் இரும்பு கம்பி வலை பொருத்தி ஹைட்ரோ சீடிங் முறையில் புற்கள் வளர்த்து நிலச்சரிவை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் சோதனை முயற்சியாக ஊட்டி-கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து மற்றும் கட்டபெட்டு அருகே பாக்கியா நகர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. சாயில் நெய்லிங் எனப்படும் மண்ணில் இரும்பு கம்பி அமைத்து ஜியோ கிரிட் மூலம் மண் உறுதி தன்மையை அதிகரித்து கம்பி வலைகள் விரிப்பு பொருத்தி ஹைட்ேரா சீடிங் முறையில் அதன் மீது புல் விதைகள் தூவப்படும்.

இதன் மூலம் செடிகள் நெருக்கமாக வளரும். இதன் மூலம் நிலச்சரிவு தடுக்கப்படும். இத்தொழில்நுட்பம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்ட கோடப்பமந்து பகுதி மற்றும் பாக்கியாநகர் பகுதியில் புற்கள் நெருக்கமாக வளர்ந்துள்ளன. இதன் மூலம் இத்திட்டம் வெற்றியடைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து எல்லநள்ளி - கேத்தி சாலை, ஊட்டி - கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து, மடித்தொரை பகுதிகள், குன்னூர் - கோத்தகிரி சாலையில் கட்டபெட்டு, ஊட்டி - மஞ்சூர் சாலையில் இத்தலார் பகுதிகளில் நிலச்சரிவை தடுக்கும் ஹைட்ரோ சீடிங் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊட்டி, குன்னூர் மற்றும் மஞ்சூர் சாலைகள் சந்திக்கும் கீழ் கைகாட்டி பகுதியில் அண்மையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்புசுவர்கள் அமைக்கப்பட்டன. சாலையின் நடுவே ரவுண்டானா அமைக்கப்பட்டது.

தொடர்ந்து ஊட்டி சாலையில் செங்குத்தான பகுதியில் மண்சரிவு ஏற்படாத வகையில் தற்போது ஹைட்ரோ சீடிங் முறையில் மண் சரிவுவை தடுக்கும் தொழில்நுட்பம் முறையுல் புற்கள் வளர்க்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் மண்சரிவு ஏற்படுவது தடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் ெதரிவித்தனர்.