Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊட்டி அருகே நகருக்குள் சுற்றும் சிறுத்தை தெர்மல் டிரோன் உதவியுடன் வனத்துறை கண்காணிப்பு

ஊட்டி : ஊட்டி அருகே ஓல்டு போஸ்ட் ஆபீஸ், வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை நடமாடியதை தொடர்ந்து நேற்று மாலை இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் தெர்மல் டிரோன் உதவியுடன் நகருக்குள் சுற்றும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இதேபோல் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்க கூடிய ஊட்டி நகரத்தை சுற்றிலும் வனப்பகுதிகள் நிறைந்துள்ளன.

இந்த வனங்களில் இருந்து வெளியேறும் காட்டுமாடுகள், கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நகருக்குள்ளும், புறநகர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது வாடிக்கை.

வனத்துறையினர் அவற்றை வனத்திற்குள் விரட்டுவார்கள். உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வர கூடிய சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளான நாய், கோழி உள்ளிட்டவற்றை வேட்டையாடி செல்வது வழக்கம். மான், முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதை காட்டிலும், நாய் போன்றவற்றை வேட்டையாடுவது சுலபம் என்பதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதனிடையே ஊட்டி தாவரவியல் பூங்கா, ஓல்டு போஸ்ட் ஆபீஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இரவு நேரங்களில் உலாவரும் சிறுத்தை தெருவில் சுற்றித்திரியும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருகின்றன.

இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இதனை தொடர்ந்து வனச்சரகர் ராம்பிரகாஷ் தலைமையில் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளதுடன் இரவுநேர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று தமிழகம் மாளிகை அருகே ஓல்டு போஸ்ட் ஆபீஸ், வெஸ்டோடா பகுதியில் நடமாடியதை தொடர்ந்து நேற்று மாலை இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் தெர்மல் டிரோன் உதவியுடன் நகருக்குள் சுற்றும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.