*சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்
ஊட்டி : வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மரவியல் பூங்கா முதல் தேனிலவு படகு இல்லம் வரை உள்ள சாலைேயார வனத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனப்பரப்பு மிகுந்த நீலகிரி மாவட்டத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன.
இந்நிலையில் ஊட்டி மத்திய பஸ் நிலையம் பின்புறமும் மரவியல் பூங்கா உள்ளது. இப்பூங்கா அருகில் இருந்து பழைய மான் பூங்கா வழியாக தேனிலவு படகு இல்லம் மற்றும் காந்தல் பகுதிக்கு செல்ல சாலை உள்ளது. இச்சாலையானது அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளது.
இந்த வனங்களில் காட்டுமாடு, மான், முயல்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபடுவதை காண முடியும். இச்சாலையை ஒட்டி ஊட்டி ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில் மக்கள் நடமாட்டம் குறைவான இச்சாலையில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும், வாகனங்கள் ஓட்டி பழகுபவர்களும் பயன்படுத்துவார்கள்.
இந்நிலையில் சமீபகாலமாக மரவியல் பூங்காவை ஒட்டிய பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் மற்றும் பலரும் உணவு கழிவுகள், இதர திடக்கழிவு உள்ளிட்டவற்றை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து இப்பகுதியில் சாலையோர வனப்பகுதிகளில் வீசி எறிகின்றனர்.
இச்சாலையில் மலை ரயில் பாலத்திற்கு அருகே சாலையோர வனத்தில் குப்பைகள் குவிந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இங்கு குவிந்துள்ள குப்பைகளில் பிளாஸ்டிக் குப்பைகளும் அடக்கம். குப்பைகளில் உள்ள உணவுகளால் கவரப்படும் வனவிலங்குகள் பிளாஸ்டிக் பொருட்களுடன் அவற்றை சாப்பிடுவதால் அவை உயிரிழக்க கூடிய சூழலும் நிலவுகிறது.
எனவே வனவிலங்குகள், ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இப்பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை முழுமையாக அகற்றி தூய்மைப்படுத்தி வேண்டும். மீண்டும் இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

