*4 பேருக்கு வலை, வாகனங்கள் பறிமுதல்
ஊட்டி : ஊட்டி அருகே காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர். இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டு மாடுகளின் எண்ணிக்கை நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பல மடங்கு அதிகரித்துள்ளன.
இவை சர்வ சாதாரணமாக தேயிலை தோட்டங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிக்குள் வந்து செல்கின்றன. இந்த காட்டு மாடுகள் அதிகரித்த நிலையில், அடிக்கடி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி வருகின்றன.
மேலும் இரவு நேரங்களில் அனைத்து சாலைகளிலும் இவை உலா வருவது தற்போது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், குன்னூர் அருகே காட்டேரி அணை பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஆண் காட்டுமாடு ஒன்று துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் வனத்துறையினரையும், வன ஆர்வலர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.
மேலும், பைக்காரா பகுதியிலும் காட்டு மாடு வேட்டையாடப்பட்டது. இந்த வேட்டையில் ஈடுபட்டவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், இதுபோன்ற காட்டு மாடுகளை வேட்டையாடுவது கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள கல்லக்கொரை பகுதியில் நேற்று அதிகாலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிலர் டார்ச் வெளிச்சத்துடன் அப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்த வனத்துறையினர் அங்கு விரைந்தபோது, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. வனத்துறையினர் விரட்டிச்சென்றனர். இதில், கேரள மாநிலம் வழிக்கடவை சேர்ந்த ரேஜி (47) என்பவர் சிக்கினார்.
அவரிடம் வனத்துறையினர் விசாரித்தபோது, காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது. அவரை கைது செய்த வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.தப்பி ஓடிய 4 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர். வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


