அதிமுக ஆட்சியில் 5% பணிகள் மட்டுமே நிறைவு ஜி.டி.நாயுடு பெயர் வைத்ததே தெரியாமல் பேசிய எடப்பாடி: நெட்டிசன்கள் தாக்கு
கோவை: கோவை அவினாசி ரோடு மேம்பாலம் கடந்த 2020ல் அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் இந்த மேம்பாலம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கின. ஆனால், மண் பரிசோதனை மற்றும் பில்லர் அமைப்பதற்கு சாலையின் நடுவே குழி தோண்டுதல் ஆகிய பணிகள் மட்டும் நடந்து வந்தன. அதிமுக ஆட்சி நிறைவுபெறும் வரை அதாவது, 2021 மே வரை வெறும் 5 சதவீத பணிகள் மட்டுமே நடந்து முடிந்திருந்தது.
2021 மே 7ம்தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகே இப்பாலம் கட்டுமான பணி வேகம் எடுத்தது. திட்ட மதிப்பீடு ரூ.1,300 கோடியில் இருந்து ரூ.1,791.23 கோடியாக உயர்த்தப்பட்டு, 10.10 கி.மீ தூரம் இப்பாலம் கட்டுமான பணி கடந்த 4 ஆண்டுகளாக படு வேகமாக நடந்து வந்தது. நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு 6 மாதத்திற்கு ஒருமுறை கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டு, வேகப்படுத்தினார். தற்போது 95 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. அதாவது, மொத்தமுள்ள 10.10 கி.மீ தூரத்தில், நான்கு இடங்களில் ஏறுதளம், இறங்குதளம் அமைக்கும் பணிகள் மட்டும் இன்னும் 5 சதவீதம் பாக்கி உள்ளது.
ஆனால், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்றுமுன்தினம் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அவினாசி ேராடு மேம்பாலம் கட்டுமான பணி அதிமுக ஆட்சியில் 55 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது எனக்கூறியுள்ளார். அத்துடன், இந்த மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி பெயர் சூட்டி அறிவிப்பு வௌியிட்ட பின்னரும், இந்த மேம்பாலத்துக்கு கலைஞர் மேம்பாலம் என பெயர் சூட்டி விடாதீர்கள் என பேசியுள்ளார். ஜி.டி.நாயுடு மேம்பாலம் என பெயர் சூட்டியதுகூட தெரியாமல் இப்படி பேசியுள்ளாரே... இவர், தமிழ்நாட்டில்தான் இருக்கிறாரா...? இவர் முன்னாள் முதல்வர்தானா...? என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.