புதுடெல்லி: சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட இணையதளம் மீதான பணமோசடி வழக்கில், பிரபலங்கள் பெயர்களைப் பயன்படுத்தி செயல்பட்ட நிறுவனத்தின் ரூ.110 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.சைப்ரஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பாரிமேட்ச்’ என்ற சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் மீதான பணமோசடி தடுப்புச் சட்ட வழக்கின் கீழ், அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. முன்னதாக நாடு முழுவதும் பல இடங்களில் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட சோதனைகளில், பல்வேறு பினாமி வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த 110 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சோதனைகளின்போது குறைந்தது 1,200 கடன் அட்டைகளும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மும்பை இணையவழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த விசாரணையைத் தொடங்கியது. விசாரணையில், இந்த சூதாட்ட இணையதளம், ஆன்லைன் விளையாட்டுப் போட்டிகளுக்கு நிதி வழங்குவது மற்றும் பிரபலங்களைக் கொண்டு விளம்பரம் செய்வது போன்ற சட்டவிரோத சந்தைப்படுத்தல் உத்திகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானது தெரியவந்துள்ளது.
அதிக வருமானம் தருவதாக ஆசை காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றி, ஓர் ஆண்டில் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர்களான சுனில் நரேன், நிக்கோலஸ் பூரன், பிரபல பாலிவுட் நடிகை மற்றும் இந்திய ராப் பாடகர் ஆகியோர் இந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதர்களாக செயல்பட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.