Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பருவ வயதில் வரும் முகப்பருவிற்கு ஆன்லைன் மூலம் சுயமருத்துவம் செய்வதை தவிர்க்க வேண்டும்: தோல் மருத்துவர்கள் அறிவுரை

* அறிவியல் ரீதியாக அணுக வேண்டும்

பருவ வயதில் ஏற்படும் முகப்பரு பாதிப்பிற்கு, ஆன்லைன் மூலம் சுயமருத்துவம் செய்வதை தவிர்க்க வேண்டும் என தோல் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். பதின்பருவ வயதினருக்கு (டீன் ஏஜ்) 13 வயது முதல் 25 வயது வரையிலும் முகப்பரு பிரச்னை வருகிறது. இந்த முகப்பரு பாதிப்பை சரி செய்ய பல்வேறு சோப்புகள், கிரீம்கள் பயன்படுத்திய போதும், தீர்வு கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்வதில் தாழ்வு மனப்பான்மை கொள்வது, விடுமுறை எடுப்பதால் படிப்பும் பாதிக்கப்படுகிறது. மேலும், பொது நிகழ்ச்சிகள், திருமணங்கள் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பருவ வயதினர் தயக்கம் கொள்கின்றனர். முகப்பரு குறித்து பெற்றோர்களும், குழந்தைகளும் மன உளைச்சலுக்கு உள்ளாகாமல், அறிவியல் ரீதியாத இதனை அணுக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து சேலம் தோல்நோய் பேராசிரியர் டாக்டர் கருணாகரன் கூறியதாவது: பொதுவாக முகப்பருக்கள் 13 வயதில் தொடங்குகிறது. முகப்பரு வருவதற்கான காரணம் குறித்து சமுதாயத்தில் பல்வேறு தவறான கதைகளும், புனைவுகளும் காணப்படுகிறது. இதனை புறம் தள்ளி விட்டு, அறிவியல் பார்வையில் முகப்பருவை அணுக வேண்டும். தோலின் மேற்பரப்பில் வறட்சி ஏற்படாமல் இருக்க, தோலின் உள் பகுதியில் உள்ள சீபச்சுரப்பி, சீபம் என்னும் வழவழப்பான எண்ணெய் போன்ற திரவத்தை சுரப்பது இயக்கையான ஒன்றாகும். தோலில் உள்ள சீப சுரப்பியிலிருந்து சீபம் வௌியேறும், மிக நுண்ணிய குழாய்களில் அடைப்பு ஏற்படுவதாலே முகப்பரு உண்டாகிறது. அதாவது, அடைப்பட்ட சீபம் தோலின் மேற்பகுதிக்கு வர பக்கவாட்டில் முயற்சிக்கும் போது, ஏற்படுகிற ஒருவித தடிமனே முகப்பரு ஆகும்.

முகப்பரு என்பது முகம் தவிர்த்து நெற்றி, கன்னங்கள், தாடை பகுதி, தாடையின் அடிப்பகுதி, முதுகுப்பகுதி, தோள்பட்டைக்கு கீழும், முழங்கைக்கு மேல் உள்ள பகுதிகளிலும் வரும். சிலருக்கு சில மாதங்களில், தானாகவே இந்த பருவின் தாக்கம் குறைந்து மறைந்து விடுகிறது. ஒரு சிலருக்கு மீண்டும் மீண்டும் வருவதோடு, அந்த இடங்களில் தழும்பும், தோலில் நிற மாற்றமும் ஏற்படுகிறது. இதனால் முகப்பொழிவை குறைக்கிறது. முகப்பொழிவு குறைவு பாதிப்பை தடுக்க ஆரம்ப நிலையிலேயே அருகில் உள்ள தோல்நோய் மருத்துவரை அணுகி உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். விளம்பரங்களை பார்த்து மாத்திரைகள், கிரீம், வாஷ்கள் பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். முகப்பரு இயற்கையாகவே குறிப்பிட்ட வயதில் ஏற்படும் விசயமாக இருந்தாலும், ஹார்மோன் அளவில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் வருகிறது.

மேலும், சில வகை மாத்திரைகள், அதிக நேரம் வெயிலில் அலைவது, மன அழுத்தம் காரணமாகவும் முகப்பரு வர வாய்ப்புகள் உள்ளது. மன அழுத்தம் மற்றும் பதற்றம் இல்லாமல் இருப்பதும் அவசியம் ஆகும். உணவை பொறுத்தவரை, அதிகமான இனிப்பு மற்றும் பால்சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. மிகப்பெரிய அளவில் உள்ள முகப்பருவை தொடர் சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும். ஆன்லைன் மூலம் சுயமருத்துவம் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

செய்யக்கூடாதவை:

தொடர்ச்சியாக முகப்பருவை தேய்க்க கூடாது. எந்த சூழ்நிலையிலும் முகப்பருவை கிள்ளக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம், வேறு சில பாக்டீரியா நோய்களையும் முகத்தில் உருவாக்கி, பெரும் தொல்லையை தரும். அடிக்கடி முகத்தை கண்ணாடியில் பார்த்து கொண்டிருக்க கூடாது. வெயில் காலத்தில் மட்டும், அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் வெயில் படாத வகையில் குடை பிடிக்கலாம். வெயில் நேரத்தில் கிரிக்கெட் போன்ற வௌி விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும்.

செய்ய வேண்டியவை:

மன அழுத்தத்தை தவிர்க்க தன்னுடைய பணிகளை திட்டமிட்டு சரியாக செய்ய வேண்டும். தினமும் உடற்பயிற்சி, மனவளக்கலை பயிற்சி போன்ற புத்தாக்க பயிற்சிகளை செய்வதன் மூலம் மன அழுத்தம் குறையும். இதன் காரணமாக முகப்பருவின் வீரியமும் குறையும். அதிக காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.