சென்னை: கேட் நுழைவுத் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த மாதிரி தேர்வுகள் இணையவழியில் நடத்தப்பட உள்ளது. நம்நாட்டில் ஐஐஎம் போன்ற தேசிய முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர கேட் (Common Admission Test-CAT) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேணடும். அதன்படி நடப்பாண்டுக்கான கேட் தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் வரும் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வை கோழிக்கோடு ஐஐஎம் நடத்தவுள்ளது. மேலும், காலை 8.30-10.30, மதியம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்தம் 3 அமர்வுகளாக தேர்வானது நடைபெறும். இந்த தேர்வெழுத நாடு முழுவதும் சுமார் 2.9 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த நவம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கேட் நுழைவுத் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த மாதிரி தேர்வுகள் கோழிக்கோடு ஐஐஎம் சார்பில் இணையவழியில் நடத்தப்படுகிறது. தேர்வில் பங்கேற்க பட்டதாரிகள் https://iimcat.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட தளத்தில் அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


