சென்னை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்ற 27 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கனகராஜ் ஒன்றிய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார்.
அவருக்கு 9 மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகியிருக்கிறது. மகிழ்ச்சியுடன் வாழ வேண்டிய இளைஞரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.