கடந்த அக்டோபர் மாதத்தில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த 109 பேரிடம் ரூ.1.37 கோடி ஒப்படைப்பு: சென்னை சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை
சென்னை: கடந்த அக்டோபர் மாதம் சைபர் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட 1.37 கோடி பணத்தை 109 புகார்தாரர்களிடம் சென்னை சைபர் க்ரைம் போலீசார் ஒப்படைத்தனர். சென்னையில் வெளிநாடுகளில் இருந்து போதை பொருள் பார்சல் வந்ததாகவும், வங்கி அதிகாரி, மின்வாரிய அதிகாரி என பல்வேறு மோசடி மூலம் பணத்தை பறிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த புகார்களில் 40 புகார் மனுக்கள் பெற்று 34 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு சைபர் குற்றவாளிகள் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.66,59,329 பணம் மீட்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை பெருநகர வடக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்கள் 25 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.29,98,913 பணம், மேற்கு மண்டலத்தில் பெற்றப்பட்ட 30 புகார்கள் பெற்று அதில் 15 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.18,45,501 பணமும்,
தெற்கு மண்டலத்தில் பெற்றப்பட்ட 50 புகார்கள் பெறப்பட்டு அதில் 21 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.4,20,162 பணமும், கிழக்கு மண்டலத்தில் பெறப்பட்ட 33 புகார் பெற்றபட்டு அதில் 14 மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.18,29,523 பணம் என மொத்தம் சென்னை பெருநகர காவல் எல்லையில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக 164 மனுக்கள் பெற்று அதில் 109 புகார்தாரர்களின் மனு மீது நடவடிக்கை எடுத்து, சைபர் குற்றவாளிகளிடம் இழந்த ஒரு கோடியே 37 லட்சத்து 53 ஆயிரத்து 428 ரூபாய் பணம் மீட்கப்பட்டது.
பின்னர் உரிய சட்ட விதிகளின் படி 109 புகார்தாரர்களிடம் சைபர் க்ரைம் போலீசார் ஒப்படைத்தனர். அந்த வகையில் கடந்த 10 மாதத்தில் சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் க்ரைம் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையின் மூலம் ரூ.23.03 கோடி பணம் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
