Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆன்லைன் வாடிக்கையாளர் கருத்து பதிவில் முதலிடம் பிடித்தது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்: பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் உறுதி

சென்னை: ஆன்லைன் வாடிக்கையாளர் கருத்துப் பதிவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் என மெட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதுதொடபர்பாக மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: காமெட் (Community of Metros) உலகம் முழுவதும் உள்ள நகர்ப்புற மெட்ரோ ரயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, தரநிலைகளை நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2024ம் ஆண்டில் இந்த அமைப்பில் ஒரு புதிய உறுப்பினராகச் சேர்ந்தது. உலகத்தரத்திலான செயல்பாடுகளை அடைவதற்கும், முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கும் இது முக்கிய கவனம் செலுத்துகிறது.

இந்த குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆண்டுதோறும் முக்கிய செயல்பாட்டுக் குறிகாட்டிகள் குறித்த தரவுகளைச் சேகரிக்கின்றனர். இதன் மூலம் செயல்பாடுகள் அளவிடப்பட்டு, சர்வதேச தரநிலைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. இந்த ஒப்பீடு, உறுப்பினர்களாக உள்ள மெட்ரோ ரயில் நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், சிறந்த நடைமுறைகளை அடையாளம் காணவும் உதவுகிறது. மேலும், முடிவெடுக்கும் செயல்பாட்டிற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். காமெட் நிறுவனம் ஆகஸ்ட் 2025ல், ஆன்லைன் வாடிக்கையாளர் கருத்துப் பதிவு இணையதளம் மூலம் நடத்திய வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பங்கேற்றது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் இந்த கணக்கெடுப்பு பற்றிய விளம்பரம் சுவரொட்டிகள், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பு, சேவைத் தரம், அணுகல், கிடைக்கும் தன்மை, நம்பகத்தன்மை, பாதுகாப்பு, பயன்படுத்துவதற்கான எளிமை மற்றும் சவுகரியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

உலகெங்கிலும் உள்ள 32 மெட்ரோ ரயில் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அதிக எண்ணிக்கையிலான பங்கேற்புகள் மற்றும் சுமார் 6500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பதில்களைப் பெற்று, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவைகளுக்கான ஒட்டுமொத்த வாடிக்கையாளர் திருப்தி மதிப்பெண் 5க்கு 4.3 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் மதிப்புமிக்க கருத்துக்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய, தொடர்ச்சியான மேம்பாடுகளைச் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உறுதியளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.