டெல்லி: பணம் வைத்து விளையாடும், 'ஆன்லைன்' விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையிலான, 'ஆன்லைன் கேமிங்' ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் பணம் வைத்து விளையாடும் நபர்கள் குறுகிய காலத்திலேயே அந்த விளையாட்டிற்கு அடிமையாகி, பணத்தை இழப்பதோடு தற்கொலையும் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பணம் சம்பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளில் பலரும் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். பல குடும்பங்கள் கடனில் தள்ளப்படுகின்றன.
இதை முறைப்படுத்தப் புதிய ஆன்லைன் கேமிங் மசோதாவை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்தது. இந்த மசோதாவுக்கு செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் என்று பெயரில் இந்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதாவின் கீழ் பணம் வைத்து விளையாடும் அனைத்து கேமிங் பரிவர்த்தனைகளும் தடை செய்ய முடியும். அதாவது ஆன்லைன் விளையாட்டுகளுக்குப் பணம் அனுப்பும் பரிவர்த்தனைகளை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செய்ய அனுமதிக்கப்படாது. இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட கேம்களுக்கு பண பரிவர்த்தனை செய்ய முடியாது.
இதற்கிடையே இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர், முதல்வர் கைதானால் பதவிநீக்கம் என்று ஒன்றிய அரசு கொண்டு வந்த இன்னொரு மசோதாவுக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சியின் கடும் அமளியில் ஈடுபட்டிருந்தனர். அந்த அமளிக்கு நடுவில் தான் இந்த மசோதா தாக்கலானது. இருப்பினும், கடும் அமளிக்கு நடுவே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு, இம்மசோதா சட்டமாகும். இந்த மசோதா சட்டமானால், ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இது ஆன்லைன் கேமிங் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.