ஆன்லைனில் மோசடி இணைய முகவரிகளை கண்டறிந்து முடக்கும் பணியில் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிரம்!
சென்னை: ஆன்லைனில் மோசடி இணைய முகவரிகளை கண்டறிந்து முடக்கும் பணியில் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 2025 ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் ரூ.1010 கோடி இழந்துள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் . தேசிய சைபர் குற்றப் புகார் மையத்தில் மொத்தம் 88,479 புகார்கள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தனர்.கடந்த 3 மாதத்தில் 510 மோசடி லிங்க்குகள், வெப்சைட்களை முடக்கி இருப்பதாக சைபர் கிரைம் போலீஸ் தகவல் தெரிவித்தனர். மே மாதம் 169, ஜூனில் 177, ஜூலையில் 164 மோசடி லிங்க்குகள், வெப்சைட்டுகள் முடக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ் அப், பல்வேறு வலைத்தளங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் தான் அதிக மோசடி லிங்க்குகள்; இன்ஸ்டாவில்தான் அதிகப்படியான லிங்க்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். பொதுமக்கள் சைபர் மோசடிகளைப் புகாரளிக்க, தேசிய சைபர் குற்ற தடுப்பு இணையதளமான www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணைப் பயன்படுத்தலாம். தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு, மாநிலம் முழுவதும் உள்ள 54 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் மற்றும் மாநில சைபர் கட்டளை மையம் (SCCC) மூலம் இந்த மோசடிகளை எதிர்கொள்ள முயற்சித்து வருகிறது.