ஆன்லைன் மூலம் பல்வேறு வகையில் 5 மாதத்தில் 51,838 பேரிடம் ரூ.559 கோடி மோசடி: 5,220 வங்கி கணக்குகளை முடக்கி மாநில சைபர் க்ரைம் நடவடிக்கை
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் கடந்த 5 மாதத்தில் 51,838 பேரிடம் ரூ.559 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக மாநில சைபர் க்ரைம் தெரிவித்துள்ளது. இதையடுத்து குற்றவாளிகளின் 5,220 வங்கி கணக்குகள் முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் வங்கி ஓடிபி மோசடி, மின்வாரியம், பாஸ் ஸ்கேம் மோசடி, வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் மோசடி, இன்வெஸ்ட்மெண்ட் மோசடி என பல்வேறு வகையில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் இருந்து பணத்தை பறித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநில சைபர் க்ரைம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் மோசடி நபர்கள் ஒவ்வொரு நாளும் புதுபுது வகையில் மோசடியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் மின்சார கட்டணம், வங்கி மோசடி, டெலிகிராம், கொரியர் மோசடி என பல்வேறு வகையில் கடந்த 5 மாதத்தில் பாதிக்கப்பட்டதாக மாநிலம் முழுவதும் இருந்து 51,838 பேர் மாநில சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக அதில், வங்கி பணம் மோசடி தொடர்பாக 40,150 பேர் புகார் அளித்துள்ளனர்.
அதற்கு அடுத்தப்படியாக பிரபல கொரியர் நிறுவனம் பெயரில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக 11 ஆயிரம் பேர் புகார் அளித்துள்ளனர்.அதன்படி பல்வேறு மோசடியில் பொதுமக்களிடம் இருந்து ரூ.559 கோடி வரை மர்ம நபர்கள் பணம் பறித்துள்ளனர். புகார்களின் படி இதுவரை மோசடி நபர்களின் ரூ.115 கோடி மதிப்புள்ள 5,220 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 5 மாதத்தில் 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 4 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.மேலும் இந்த மோசடி தொடர்பாக மர்ம நபர்களின் 2 ஆயிரம் வங்கி கணக்குகளை முடக்க மாநில சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.