Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் அளிக்கக்கோரி ஓஎன்ஜிசிக்கு நோட்டீஸ்: மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுப்பியது

சென்னை: அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு, கடந்த 20.2.2020 அன்று தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம், 2020ஐ இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள், மேலும் புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய டெல்டா பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன் மற்றும் ஷேல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி மற்றும் அகழ்வுத் தொழில்கள் ஆகியவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2023ம் ஆண்டு இத்தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதற்கிடையே ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி இருந்தது. இதுகுறித்து நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், அந்த அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.