‘ஒன் டூ ஒன்’ மூலம் ஆலோசனை திருவள்ளூர் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தல் பணிகளை முடுக்கி விட உத்தரவு
சென்னை: திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் பணிகளை முடுக்கி விட அவர் உத்தரவிட்டார். திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை அவர் 42 நாட்கள் 90 சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின்போது கட்சி நிர்வாகிகள் செயல்பாடு குறித்து கேட்றிந்து வருகிறார். சரியாக செயல்படாத நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்து வருகிறார். அவர்கள் ஒழுங்காக செயல்பட அறிவுரை வழங்கி வருகிறார்.
தொண்டர்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் கூறி வருகிறார். மேலும், உட்கட்சி பூசல், அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகள் மற்றும் புகார்களுக்கு உள்ளான நிர்வாகிகளை அதிரடியாக நீக்கியும் வருகிறார். இதனால், டூ ஒன்’ மூலம் சந்திக்கும் நிர்வாகிகள் தொகுதியில் திமுகவின் செயல்பாடு குறித்து மனம் விட்டு முதல்வரிடம் பேசி வருகின்றனர். தொகுதி களநிலவரம் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார்.
இதில், தொகுதி வாரியாக பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் திமுக செயலாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது, சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதி வெற்றி நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளதால் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும். கடந்த தேர்தலை விட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற உழைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் எஸ்ஐஆர் பணிகள் குறித்தும் நிர்வாகிகளிடம் விசாரித்தார். தன்னை சந்தித்த அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தங்களை பரிசாக வழங்கினார்.


