Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி நிர்வாகிகளுடன் சந்திப்பு முதல்வரிடம் வைக்கும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு: தாமதப்படுத்தும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்கவும் அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு

சென்னை: ‘’ஒன் டூ ஒன்’ மூலம் திமுக தொகுதி நிர்வாகிகளுடன் சந்திப்பின்போது முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் தாமதப்படுத்தும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்கவும் அமைச்சர்களிடம் அறிவுறுத்தியுள்ளார். திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில், “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் திமுக செயலாளர்களை ஒவ்வொருவரையும் தனித்தனியாக கடந்த ஜூன் 13ம் தேதி முதல் சந்தித்து வருகிறார். திமுக நிர்வாகிகள் ‘ஒன் டூ ஒன்’-ஆக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்கள் மனதில் உள்ளதை தெரிவித்து வருகின்றனர். அப்போது மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகிகளிடம் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் திமுக ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரது ஆதரவு நிலை குறித்தும், மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், மாணவ- மாணவிகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சாதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை விளக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார். இச்சந்திப்பின்போது, முன்வைக்கப்படும் கோரிக்கைகள் பெரும்பாலானவற்றுக்கு உடனடியாக அமைச்சர்களிடம் பேசித் தீர்வு காணப்படுவதோடு, மண்டல பொறுப்பாளர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கண்காணித்து அறிக்கை தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் “உடன்பிறப்பே வா” நிகழ்வின் 80வது தொகுதியாக நேற்று ஒசூர் நிர்வாகிகளை திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது அந்த மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் முழுவதும் வெற்றி பெறவில்லை என்றால் மாவட்ட செயலாளர் முதல் அனைத்து நிர்வாகிகளும் பதவிகளும் பறிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்ததாக கூறப்படுகிறது. கடந்த முறை சந்திப்பின் போது திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் நிர்வாகிகள் பதவிகள் பறிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“உடன்பிறப்பே வா” நிகழ்வின் மூலம் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் ராஜபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை திறக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை அறிவாலயத்திற்கு அழைத்து அம்மருத்துவமனையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தாமதப்படுத்தும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்கவும் அறிவுறுத்தினார். “உடன்பிறப்பே வா” நிகழ்வின் மூலம் தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பிரச்சனைகள் குறித்து திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக தெரிவித்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதால் திமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் தங்கள் பகுதிக்கான “உடன்பிறப்பே வா” நிகழ்வு எப்போது நடக்கும் என்று ஆவலாக உள்ளனர்.