‘’ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி நிர்வாகிகளுடன் சந்திப்பு கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை
சென்னை: ‘’ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி நிர்வாகிகளுடன் சந்திப்பின்போது முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம்தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை 79 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.
இந்தநிலையில் 80வது தொகுதியாக ஓசூர் தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதி வெற்றி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளதால் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெறவேண்டும் என்று அறிவுறுத்தினார். எஸ்ஐஆர் பணிகளில் உள்ள குழப்பங்களினால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இந்த நிர்வாகிகள் சந்திப்பின் போது முன்வைக்கப்படும் கோரிக்கைகள் பெரும்பாலானவற்றுக்கு உடனடியாக அமைச்சர்களிடம் பேசி முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டு வருகிறார். நேற்று ராஜபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை திறக்கப்படவில்லை என்ற கோரிக்கையை தீர்க்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை உடனடியாக அறிவாலயத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மண்டல பொறுப்பாளர்கள் அனைத்து பிரச்சனைகளையும் பாலோ அப் செய்து ரிப்போர்ட் தர வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

