Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

2 ஆண்டுக்கு பின் ஒருநாள் போட்டி அணியில் சேர்ப்பு: ஆடும் லெவனில் ருதுராஜூக்கு வாய்ப்பு கிடைக்குமா?

கவுகாத்தி: இந்தியா-தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே டெஸ்ட் தொடர் முடிந்ததும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டி வரும் நவ. 30ல் ராஞ்சியில் நடக்கவுள்ளது. 2வது போட்டி ராய்பூர் (டிச. 3), 3வது போட்டி விசாகப்பட்டனத்தில் (டிச. 6) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கழுத்து வலியால் பாதிக்கப்பட்டுள்ள கேப்டன் சுப்மன் கில் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்டர் லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அவர் 12 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி உள்ளார். இதில் 8ல் வெற்றி, 4ல் தோல்வி கண்டுள்ளது.

இதேபோல் 28 வயதான ரிஷப் பன்ட்டிற்கு 15 மாதங்களுக்கு பின் ஒருநாள் போட்டியில் இடம்கிடைத்துள்ளது. ஸ்ரேயாஸ் இல்லாததால் அவர் துணை கேப்டனாக செயல்படஉள்ளார்.

ரோகிர் சர்மா, விராட் கோஹ்லி, தங்கள் இடத்தை தக்க வைத்துள்ளனர். சிராஜ், பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஆடிய அக்சர்பட்டேல் நீக்கப்பட்டு ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சுப்மன் கில் இல்லாத நிலையில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 ஆண்டுக்கு பின் ஒருநாள் தொடருக்கான அணியில் ருதுராஜ்க்கு இடம் கிடைத்துள்ளது. கடைசியாக அவர் 2023ம் ஆண்டு தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் தான்ஆடினார். இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ள அவர் ஒரு அரைசதத்துடன் 115 ரன் அடித்துள்ளார். அணியில் இடம் பிடித்திருந்தாலும் ருதுராஜ்க்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. இடதுகை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்குவார்.

ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டுள்ள நிலையில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வரும் 26ம் தேதி தொடங்கும் சையத் முஷ்டாக் அலி டி.20 தொடரில் பரோடா அணிக்காக களம் இறங்க உள்ளார். தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டி.20 தொடரில் அவர் களம் இறங்குவார்.