அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒன்டே மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் ஒருநாள் தொடரில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித்சர்மா 8, விராட் கோஹ்லி டக்அவுட் ஆகினர். கேப்டன் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் நாளைய போட்டியில் ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பவுலிங்கில் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுகிறார். மேலும் ஹர்சித் ராணாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு நாளை பதிலடி கொடுக்கவேண்டிய நெருக்கடியில் இந்தியா களம் இறங்குகிறது.
இதற்காக இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோகித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி நேற்று ஒரு மணி நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். மறுபுறம் ஆஸ்திரேலியா முதல் போட்டியில் வென்ற உத்வேகத்தில் நாளையும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில்உள்ளது. பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் அதிரடியில் மிரட்டுவர். முதல் போட்டியில் ஆடாத அலெக்ஸ் கேரி, ஆடம் ஜாம்பா மற்றும் ஜோஷ் இங்கிலீஸ் வருகை கூடுதல் பலம் சேர்த்துள்ளது. பவுலிங்கில் வேகத்தில் ஸ்டார்க், ஹேசல்வுட் வழக்கம் போல் இந்தியாவை மிரட்ட காத்திருக்கின்றனர். வலுவான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்தியா கடுமையாக போராடுவது அவசியம். பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
அடிலெய்ட்டில் இதுவரை....
* 50ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கக்கூடிய அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்தியா இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9ல் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இதில் ஆஸி.க்குஎதிராக மோதிய 6 போட்டியில் 2ல் வெற்றி, 4ல் தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியாஇங்கு 54 போட்டிகளில் ஆடி 37ல் வெற்றி, 17ல் தோல்வி அடைந்துள்ளது. இங்கு கடைசியாக இந்தியாவுக்கு எதிராக மோதிய 2 போட்டியிலும் ஆஸி. தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஆஸி.அணி அடிலெய்ட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 2017ல் 369/7 ரன் எடுத்தது தான் அதிகபட்சம். இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 2015 உலக கோப்பையில் 300/7 ரன் எடுத்ததுதான் பெஸ்ட் ஸ்கோர்.
154வது முறையாக மோதல்
இரு அணிகளும் நாளை 154வது முறையாக ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன. இதற்கு முன் மோதிய 153 போட்டியில் ஆஸ்திரேலியா 85 , இந்தியா 58 போட்டிகளில் வென்றுள்ளன. 10 போட்டி கைவிடப்பட்டுள்ளது. ஆஸி.யின் வெற்றி சராசரி 59.44, இந்தியாவின் வெற்றி சதவீதம் 40.55ஆக உள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் ஆஸி. 3-2 என முன்னிலை வகிக்கிறது.
மழைக்கு வாய்ப்பா?
பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2வது போட்டி நடக்கும் அடிலெய்ட்டில் நாளை 20 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் போட்டி மழையால் பெரிதாக பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்., அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.