சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது ராட்சத கான்கிரீட் பாலம் விழுந்து ஒருவர் பலியாகியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெறுகிறது. இவற்றில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகும். இந்த வழித்தடத்தில் போரூர் முதல் சென்னை வர்த்தக மையம் இடையே பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் ராமாபுரம் அருகே உயர்மட்ட பாதையில் நேற்று இரவு இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் சிக்கி ஒருவர் சிக்கி பரிதாபமாக பலியானார். சரிந்து விழுந்த இணைப்பு பாலத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மணப்பாக்கத்தில் உள்ள எல் அண் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு தூண்கள், அதன் இணைப்புப் பாலம் சரிந்து விழுந்ததால் இடிந்தன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் இடிபாடுகளை அகற்றி வருகிறது.
மேலும் இடிபாடுகளுக்கான காரணத்தை உறுதிப்படுத்த விசாரணை நடத்தப்படும். இந்த சம்பவத்தின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்ததை வருத்தத்துடன் உறுதிப் படுத்துகிறோம். இருசக்கர வாகனத்தின் பின்னால் ஒருவர் அமர்ந்திருந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை விரைவில் தொடங்கப்பட உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.