எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்புயலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு: ஒருவர் பலி, 350 பேர் பாதுகாப்பாக மீட்பு
பெய்ஜிங்: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிப்புயலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையேறுபவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். பனிப்புயலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகின் மிகவும் உயரமான மலைப்பகுதியான எவரெஸ்டில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் மலையேற்றம் செய்வது வழக்கமாகும். நேபாளம் மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ளதால், இரு நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள் மலையேற்றத்துக்கு வருவார்கள். சீனாவில் தேசிய தினம் உள்ளிட்டவற்றை கொண்டாடுவதற்காக தற்போது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 8 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் எவரெஸ்டின் திபெத் பிராந்தியத்தில் கடும் பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 மீட்டர் உயரத்தில் உள்ளது. பனிப்புயல் காரணமாக அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் உட்பட சுமார் ஆயிரம் பேர் திரும்பி வரமுடியாமல் சிக்கி உள்ளனர். இது குறித்து தகவல் பரவிய நிலையில் மீட்பு குழுவினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களுடன் அங்கு விரைந்துள்ளனர். பனிப்புயலில் சிக்கிய மலையேற்ற வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுமார் 350க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மேலும் காணாமல் போன மலையேற்ற வீரர்களை தேடும் பணியும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.