3 பேரில் ஒருவருக்கு மூட்டு பிரச்னை; இளம் வயதினரை அச்சுறுத்தும் ஆர்த்ரைட்டிஸ்: மருத்துவர்கள் அறிவுறுத்தல்
சென்னை: தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினரிடையே உடல் உழைப்பு குறைந்து வருவதும், உடற்பயிற்சி இல்லாதது, அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்வது, துரித உணவுகளையே விரும்பி சாப்பிடுவது என வாழ்க்கை முறை பெரிய அளவில் மாற்றம் அடைந்து வருகிறது. இதனால் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னை ஏற்படுகிறது. குறிப்பாக, ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு இளம் வயதினரிடையே அதிகம் ஏற்படுகிறது. ஆர்த்ரைட்டிஸ் என்பது மூட்டில் வலி, வீக்கம் மற்றும் இயக்கத்தில் கட்டுப்பாடு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு வகையாக பாதிப்பாகும். மூட்டு என்பது 2 எலும்புகளை இணைக்கக் கூடிய ஒரு பிணைப்பு. முழங்கால், கணுக்கால், இடுப்பு, கை, முழங்கை, தோள்பட்டை ஆகிய இடங்களில் மூட்டுகள் இருக்கின்றன. கழுத்து பகுதியில் எலும்புகள் பிணைக்கப்பட்டு உள்ளது. எலும்புகளை இணைக்கும் இந்த மூட்டுகள் இருப்பதால் தான் நம்மால் எந்த செயலையும் செய்ய முடிகிறது. ஆர்த்ரைட்டிஸ் ஒரு காலத்தில் முதியோரின் உடல்நல பிரச்னையாக மட்டுமே கருதப்பட்டது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், இந்த பாதிப்பு குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்கள் என அனைத்து வயதுடையவர்களிடயே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகளவில் மில்லியன் கணக்கான இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையையும், உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்தையும் பாதிக்கும் இந்த பாதிப்பு, நவீன வாழ்க்கை முறை, உடல் பருமன், மரபணு காரணிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் உள்ளிட்ட காரணத்தினால் அதிகரித்து வருகிறது. ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஜூவனைல் இடியோபதிக் ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், கவுட் போன்ற ஆர்த்ரைட்டிஸின் பல்வேறு வகைகள் இளைய தலைமுறையினரை பாதித்து, அவர்களின் கல்வி, தொழில் மற்றும் சமூக வாழ்க்கையை சவாலுக்கு உள்ளாக்குகின்றன. குறிப்பாக, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் பொதுவாக முதியவர்களை பாதிக்கும் என்றாலும், உடல் பருமன் மற்றும் மூட்டு காயங்கள் காரணமாக இளைஞர்களிடையே இது அதிகரித்து வருகிறது. உலகளவில், 32.5 மில்லியன் பேர் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இளைஞர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது. உடல் பருமன் உள்ள இளைஞர்களில் 20-30 சதவீதம் பேருக்கு ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் ஏற்படுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 1990 முதல் 2019 வரை முழங்கால் ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23.46 மில்லியனில் இருந்து 62.35 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதுவும் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், குறிப்பாக முழங்கால் ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் (knee OA) 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே 27.1 சதவீதம் முதல் 34.6 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. குறிப்பாக, உடல் பருமன் மற்றும் விளையாட்டு காயங்கள் காரணமாக இளைய வயதினரிடையே (20-40 வயது) இது அதிகரித்து வருகிறது.
அதேபோல, ஜூவனைல் இடியோபதிக் ஆர்த்ரைட்டிஸ் 1,00,000 குழந்தைகளுக்கு 4 முதல் 16 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் பெண்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும் யூரிக் அமில படிவு காரணமாக ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ் கவுட் என அழைக்கப்படுகிறது. உலகளவில், 20-40 வயதுடையவர்களில் கவுட் பாதிப்பு 2-3 சதவீதம் ஆக உள்ளது. இதுபோன்ற பல்வேறு வகையான ஆர்த்ரைட்டிஸ் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக எலும்பியல் அறுவை சிகிச்சை மற்றும் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆறுமுகம் கூறியதாவது: கடந்த காலத்தில் மூட்டு பிரச்னை என்றால் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் மருத்துவமனைக்கு வருவார்கள். ஆனால், தற்போது 45 வயது உடையவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு வருகிறார்கள். 45 வயது முதல் 50 வயதுக்குள் மூட்டு தேய்மானம் 4ம் கட்டத்தை எட்டி விடுகிறது. நகர்புறத்தில் 3ல் ஒருவருக்கு மூட்டு பாதிப்பு உள்ளது. கிராமப்புறங்களில் அதிகமாக வேலைகள் செய்வதால் மூட்டு தேய்மானம் ஏற்படுகிறது. நீரிழிவு நோயின் தலைநகராக இந்தியா இருப்பது போல மூட்டு பிரச்னையின் தலைநகராக இந்தியா மாற உள்ளது. எனவே மூட்டு வலி அல்லது மூட்டு தேய்மானம் ஏற்படாமல் இருக்க 25 வயது முதல் மக்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
மூட்டு வலி 4 கட்டங்களாக உள்ளது. முதல் கட்டத்தில் படிக்கட்டு ஏறும்போது மூட்டு வலிக்கும் அதற்கு முறையாக சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி செய்தால் போதும். 2ம் கட்டத்தில் மூட்டு வலி உடன் மூட்டு வீக்கம் இருக்கும் அதற்கு மருத்துவர்கள் அளிக்கும் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அடுத்த கட்டமாக அறுவை சிகிச்சை அல்லது ஊசி மூலம் சிகிச்சை அளிப்பது என பல்வேறு வகையாக சிகிச்சை முறை உள்ளது. எனவே மூட்டு வலி வரமால் இருக்க இளம் வயது முதல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.