Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாரம்பரிய உடை அணிந்து பெண்கள், குழந்தைகள் நடனம்; கேரளா, குமரியில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு பூஜைகள்

நாகர்கோவில்: கேரளா மற்றும் குமரியில் ஓணம் பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடைகள் அணிந்து பெண்கள், குழந்தைகள் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கேரளாவில் ஓணம் பண்டிகை மிக முக்கியமானதாகும். இதை அந்த மாநிலத்தில் அறுவடை திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். மலையாள மக்களின் கலாச்சாரம், ஒற்றுமை, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு பிரமாண்டமான பண்டிகையாகும். இந்த பண்டிகை மகாபலி மன்னரின் வருகையை வரவேற்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் கடந்த 26ம் தேதி தொடங்கியது.

இன்று (5ம்தேதி) திருவோணம் ஆகும். இதையொட்டி ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளின் முன்புறம் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, மற்றும் பச்சை நிற பூக்களால் ஆன அத்தப்பூக்கோலமிட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயில், பத்மநாபபுரம் பத்மநாபசுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. திருச்சூர் மாவட்டத்தில் புலிகளி என்பது ஒரு தனித்துவமான கலை வடிவமாகும். கலைஞர்கள் தங்களை புலிகளாகவும் வேட்டைக்காரர்களாகவும் மஞ்சள், கருப்பு, மற்றும் சிவப்பு வண்ணங்களால் அலங்கரித்து, உற்சாகமான இசையுடன் நடனமாடுவர். ஓணத்தையொட்டி கலாச்சார நிகழ்வு நடந்தது. கதகளி, மோகினியாட்டம், மற்றும் திருவாதிரைகளி போன்ற நடனங்கள், மற்றும் செண்டை மேளம் போன்ற இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

கேரளாவையொட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் கொண்டாட்டம் உற்சாகத்துடன் நடந்தது. அதிகாலையிலேயே கோயில்களில் பக்தர்கள் திரண்டனர். பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. வீடுகளில் ஓண சத்யா (பிரமாண்ட விருந்து) நடந்தது. இது வாழை இலையில் பரிமாறப்படும் ஒரு பிரமாண்டமான சைவ விருந்தாகும், பருப்பு, சாம்பார், அவியல், தோரன், கூட்டு, பச்சடி, இஞ்சி கறி, மற்றும் பாயசம் உள்பட 24 முதல் 28 வகையான உணவு வகைகள் இடம் பெற்று இருந்தன. நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, அருமனை உள்பட மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், கேரள பாரம்பரிய ஆடைகளை அணிந்து குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் ஓணம் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் நகைகளைப் பரிசளித்து மகிழ்ந்தனர்.