அறுவடைத் திருநாளாம் ஓணத்தினை எழுச்சியோடும் ஏற்றத்தோடும் கொண்டாடும் மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணத் திருநாள் வாழ்த்து..!!
அறுவடைத் திருநாளாம் ஓணத்தினை எழுச்சியோடும் ஏற்றத்தோடும் கொண்டாடும் என் மனதிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பூக்களம், புத்தாடை, அறுசுவை உணவு, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளுடன் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் கேரள மக்களின் சகோதர உணர்வையும் வெளிப்படுத்தும் கொண்டாட்டமாக அமைந்துள்ள திருநாள்தான் ஓணம். "மாயோன் மேய ஓண நன்னாள்" எனச் சங்கத் தமிழிலக்கியத்திலும் பதிவாகியுள்ள, திராவிட இனத்தின் திருவிழாவாகத் திருவோணம் விளங்குகிறது,
ஓணத்தின் மீது சமத்துவத்துக்கு எதிரான குழுவினர் புனைந்த கதைகளில் இருந்தும், நம் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து, நல்லாட்சி புரிந்த மாவலி மன்னனை நினைவுகூரும் கொண்டாட்டமாக மலையாளிகள் ஒணத்தைப் போற்றி வருகின்றனர். திராவிட உணர்வெழுச்சியுடன் தமிழ்நாட்டுக்கு உறுதுணையாக நின்று, தென்னகத்தின் தனிச்சிறப்பைப் பறைசாற்றும் மலையாளச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இந்த ஓணம் பொன்னோணமாகத் திகழ எனது வாழ்த்துகள்! இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.