Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அலற வைக்கும் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு; தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல 3 மடங்கு கட்டணம் அதிகரிப்பு

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல 3 மடங்கு கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், விமானத்தை விட ஆம்னி பஸ் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் தங்கி படிக்கும், வேலைக்கு செல்லும் வெளிமாநிலத்தவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் பேருந்து, ரயில்கள், விமானங்களில் செல்ல தயாராகி வருகின்றனர். இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ரயிலில் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 17ம்தேதி தொடங்கிய நிலையில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டது.

தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள், அரசு பேருந்து மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல TNSTC இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், அதிலும் முன்பதிவுகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும் கூடுதலாக பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனாலும், சொந்த ஊருக்கு செல்பவர்கள் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும் என்பதால் ஆம்னி பேருந்துகளையே நம்பி இருக்க வேண்டியதுள்ளது. இதனால், கடைசி நேரத்தில் இந்த ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கேட்டால் தலையே சுற்றி விடும் நிலைக்கு பயணிகள் ஆளாகுகின்றனர்.

காரணம், டிக்கெட்டின் விலையை பல ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொள்ளை அடிக்க தொடங்கி விடுகின்றனர். இதனால் அரசு பேருந்துகளிலும், ரயில்களிலும் டிக்கெட் கிடைக்காமல் ஆம்னி பேருந்துகளில் அதிக விலை கொடுத்து சொந்த ஊருக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு அதிக பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர். கடைசி நேர ஆம்னி பேருந்து கட்டணங்களை பார்த்தால், சாதாரண நாட்களில் விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை விட அதிகமாக உள்ளது. அந்த அளவுக்கு ஆம்னி பேருந்து கட்டணங்களை கேள்வி கேட்பார் இன்றி இஷ்டத்துக்கு உயர்த்தி விடுகின்றனர். அரசுத் தரப்பில் எத்தனை முறை எச்சரிக்கை மணி அடித்தாலும் கட்டணத்தை குறைக்காமல் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வாங்குகின்றனர்.

சென்னை மாநகரில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. சராசரியாக பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணம் விமானக் கட்டணத்தை விட அதிகமாக உள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்து கட்டணங்களை 3 மடங்கு உயர்த்தி விட்டனர்.

அதாவது, குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள். தென் மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கும் பிற பகுதிகளில் இயக்கக்கூடிய ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர். சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன. காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்தி விட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன.

இதனால் மக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள். சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18ம்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதை அறிந்த ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள் தங்களது இணையதளத்தில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ஏ.சி. இருக்கைக்கு ரூ.600 முதல் ரூ.900 ரூபாய் வசூலிக்கப்படும். ஆனால் இப்போது ரூ.2000 முதல் ரூ.3000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆம்னி பேருந்தில் இந்த கட்டணம் ரூ.3989 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள்.

ஏ.சி. படுக்கை வசதிக்கு மதுரைக்கு ரூ.2000 முதல் ரூ.3200 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2000 முதல் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏ.சி. படுக்கை வசதி கட்டணம் ரூ.3500. ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2,700 கட்டணம் தற்போது நிர்ணயித்து உள்ளனர். இதே போல நாகர்கோவிலுக்கு குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.2460 கட்டணம் அதிகபட்சமாக வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.3363 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணம் தீபாவளி நெருங்கும் நேரத்தில் இன்னும் அதன் தேவையை பொருத்து உயர்த்தி கொள்வார்கள். அதிக கட்டணம் வசூலிப்பதால் நடுத்தர மக்கள் குடும்பமாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஆம்னி பேருந்துகள் ஈடுபடும் போது, தமிழக அரசு தலையிட்டு கடிவாளம் போடுவதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் ஓரளவு கட்டண ெகாள்ளையை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.

ஆனால் இந்த ஆண்டு தனியார் ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள் வெளிப்படையாக தங்களது இணையதளத்தில் கூடுதல் கட்டணத்தை அறிவித்து முன்பதிவு செய்கிறார்கள். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கட்டண கொள்ளையில் இருந்து பாவப்பட்ட பயணிகளை காப்பாற்ற முடியும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பது பயணிகளின் வலுவான ேகாரிக்கையாக உள்ளது.