சென்னை: ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் விடுமுறை நாள்கள், வார இறுதி நாள்களில் ஆம்னி பேருந்துகள் ஆயிரக்கணக்கில் கூடுதலாக இயக்கப்படும். இத்தகைய ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணங்களை வசூலிக்கின்றன. தமிழக அரசு இது தொடர்பாக பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து பேசிய போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், 10 நிறுவனங்கள் மட்டுமே ஆம்னி பேருந்துகளுக்கு அதிக கட்டணம் நிர்ணயித்துள்ளது. கட்டணத்தைக் குறைக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இத்தகைய ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.