Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆம்னி பஸ்கள் நிறுத்த வசதியாக நெல்லை வண்ணார்பேட்டை சாலை விரிவாக்கம்

*டிஆர்ஓ சுகன்யா ஆய்வு

நெல்லை : 'தினகரன்' செய்தி எதிரொலியாக ஆம்னி பஸ்கள் நிறுத்த வசதியாக நெல்லை வண்ணார்பேட்டை சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா அரசுத் துறை அதிகாரிகளுடன் கள ஆய்வு நடத்தினார்.

நெல்லையின் முக்கிய சந்திப்பாக வண்ணார்பேட்டை திகழ்கிறது. இதனால் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், ஓட்டல்கள், லாட்ஜ்கள் என வண்ணார்பேட்டையில் வணிக நிறுவனங்கள் பெருகி விட்டன. மேலும் நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவில்பட்டி, மதுரை, திருச்சி, சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும் வண்ணார்பேட்டையை கடந்து தான் பயணிக்கின்றன.

இதே போல புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்காசி, செங்கோட்டை செல்லும் பஸ்கள் வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் திரும்பி செல்கின்றன. நெல்லை மாநகர பஸ்கள் அனைத்தும் நெல்லை வண்ணார்பேட்டையில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. இதற்காக ரவுண்டானாவின் 2 புறங்களிலும் விசாலமாக பஸ்கள் நிறுத்தும் வசதி உள்ளது.

ஆனால், கோவில்பட்டி, மதுரை, சென்னை செல்லும் அரசு பஸ்களும், தனியார் ஆம்னி பஸ்களும் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை மேம்பாலம் இறக்கத்தில் ஒரே இடத்தில் நிற்கின்றன.

இதனால் இந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இந்த பகுதியை கடந்து செல்வது தீராத தலைவலியாக உள்ளது. இதைத் தீர்க்க ஆம்னி பஸ்களை நிறுத்த தனி இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 'தினகரன்' நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியானது.

இந்நிலையில், நெல்லை வண்ணார்பேட்டையில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க கலெக்டர் சுகுமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக திங்கள் தோறும் நடக்கும் சாலை போக்குவரத்து கூட்டத்திலும் கலெக்டர் விவாதித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமையில், ஆயுதப்படை உதவி போலீஸ் கமிஷனர் அசோக் குமார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மின் வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று வண்ணார்பேட்டை பகுதியில் ஆய்வு நடத்தினர்.

அதாவது, நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் ஆம்னி பஸ்கள் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை மேம்பாலத்தில் இறங்கி இடது புறமாக நின்று செல்ல வசதியாக அந்தச் சாலை மேம்பாலம் இறங்கும் பகுதியில் இருந்து கனரா வங்கியை அடுத்து, பிரபல நகைக்கடை அருகே வண்ணார்பேட்டை சாலை திரும்பும் பகுதி வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதன் மூலம் மேம்பாலத்தில் இருந்து கோவில்பட்டி, மதுரை மார்க்கமாக செல்லும் அரசு பஸ்கள் தற்போது வண்ணார்பேட்டையில் உள்ள பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும்.

அதே நேரத்தில் ஆம்னி பஸ்கள் இடதுபுறம் திரும்பி வண்ணார்பேட்டை சாலை திரும்பும் பகுதி வரை இடது புறமாக நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வழிவகை செய்யப்படும். இதற்காக நடுவில் பேரிக்கார்டுகள் வைத்து சாலை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். இதன் மூலம் வண்ணார்பேட்டை பகுதியில் பல ஆண்டுகளாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வரும் என தெரிகிறது.