சேலம்: சங்ககிரி அருகே வைகுந்தம் டோல்கேட்டில், நேற்று நள்ளிரவு, சொகுசு ஆம்னி பேருந்தில், நகை பட்டறை ஊழியரிடம் இருந்து 3 கிலோ தங்ககட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரியைச் சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் (45), மணிவண்ணன்(40). இருவரும் தனியார் சொகுசு ஆம்னி பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர். கோவையில் இருந்து நேற்று இரவு, 10.30மணிக்கு, ஆம்னி பஸ்சில் 24 பயணிகளை ஏற்றுக் கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்டனர். இரவு 12.45 மணிக்கு சேலம் மாவட்டம் சங்ககிரி வைகுந்தம் டோல்கேட் அருகே பஸ் வந்தபோது, பேருந்தில் இருந்த பயணிகள் டீ குடிப்பதற்காக பஸ் நிறுத்தப்பட்டது.
அப்போது சொகுசு பஸ்ஸில் பயணம் செய்த கோவையைச் சேர்ந்த சங்கர் (45) என்பவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து டீ குடித்துவிட்டு, மீண்டும் திரும்ப வந்து பஸ்சில் தனது இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது இவரது பேக் மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர், ‘தான் கொண்டு வந்த பையில் 3 கிலோ தங்க கட்டிகளை வைத்திருந்ததாகவும், அந்த பேக் மாயமாகிவிட்டதாகவும்’ பஸ் ஓட்டுநர்கள் மற்றும் அங்கிருந்த பயணிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சங்ககிரி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சங்கர், கோவையில் உள்ள சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான தங்க நகை செய்யும் பட்டறையில் 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதும், நேற்று நகைகள் விற்பனை செய்வது தொடர்பாக கோவையில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் 3 கிலோ நகையுடன் வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் பஸ்சில் இருந்த பயணிகள், ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அதே பேருந்தில், விஜிபாபு என்ற வாலிபர் கோவையில் பஸ்சில் ஏறியுள்ளார். சங்கர் அமர்ந்திருந்த சீட்டுக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். வைகுந்தம் டோல்கேட்டில் பஸ் நின்ற போது விஜிபாபு மட்டும் மாயமாகி உள்ளார். இதனால் போலீசாருக்கு அந்த வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த சங்கரை பின்தொடர்ந்து வந்த நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சங்ககிரியில் 3 கிலோ தங்கம் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 ஆண்டுக்கு முன் அரங்கேறிய சம்பவம்
சங்ககிரி டோல்கேட்டில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இதே போல் மூன்று கிலோ தங்க, வைர நகைகள் பஸ்சில் திருடுப்போனது. இதில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.