Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை: அடுத்த மாதம் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026ம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், அதனைத் தொடர்ந்து முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அதன்படி, சென்னை, ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு அனஸ்தீஸியா டெக்னீசியன், ஓராண்டு அறுவை அரங்கு டெக்னீசியன், ஓராண்டு ஆர்தோபீடிக் டெக்னீசியன் போன்ற சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026ம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில ஓராண்டு அனஸ்தீஸியா டெக்னீசியன் பாடப்பிரிவில் 18 காலியிடங்களும், ஓராண்டு அறுவை அரங்கு டெக்னீசியன் பாடப்பிரிவில் 21 காலியிடங்களும், ஓராண்டு ஆர்தோபீடிக் டெக்னீசியன் 9 காலியிடங்களும் என மொத்தம் 48 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்கள் தொடர்பான விவரங்கள் https://gmcomu.ac.in வளைதளத்திலும், ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியின் அறிவிப்பு பலகையிலும் காணலாம். இந்த பாடப்பிரிவிகளில் பயில, விண்ணப்பதாரர் 31.12.2025 அன்று 17 வயதை நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். தெரிவுக்/தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவாறாக பத்தாம் வகுப்பு/ மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5% இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும். விண்ணப்பங்கள் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்/துணை முதல்வர் அலுவலகத்தில் கட்டணமின்றி வழங்கப்படும். உரியமுறையில் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 14ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் முதல்வர் / துணை முதல்வர் அலுவலகத்தில் அளிக்கப்படவேண்டும். இந்த பாடப்பிரிவிகளில் பயில்வதற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முழு மாணவர் சேர்க்கை செயல்முறையும் அடுத்த மாதம் 14ம் தேதி நிறைவுபெறும். இதற்கான கலந்தாய்வு சென்னை, ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன் மேனிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுசான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் (பொருந்துமாயின்), சாதிச்சான்றிதழ், வயதுச்சான்று (பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ்), மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்துமாயின்), ஆதார்அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். தெரிவு செய்யும் நடைமுறை பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி முற்றிலும் தகுதி மற்றும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அமையும். கலந்தாய்வின் போது ஒதுக்கீடு ஆணைகள் அந்த இடத்திலேயே வழங்கப்படும். சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் திறன் அடிப்படையிலான சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில்வதற்கு இந்த வாய்ப்பை தகுதியுள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்தப்பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், பொருந்தக்கூடிய விதிகளுக்குட்பட்டு ”வெற்றிநிச்சயம்” திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்களாக இருக்கலாம். எனவே, மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில ஆர்வம் உள்ள தகுதியான மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.