சென்னை: இந்தியாவில் முதல் முறையாக, ஒலிம்பிக் டிஸ்டன்ஸ் டிரையத்லான் போட்டிகள், வரும் 2026ம் ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளன. ஒலிம்பிக் டிஸ்டன்ஸ் டிரையத்லானில், ஒலிம்பிக் போட்டிகளில் கடைபிடிப்பதை போன்ற விதிமுறைகளுடன் போட்டிகள் நடைபெறும். இதில், 1.5 கி.மீ தூரம் நீச்சல், 40 கி.மீ. தூரம் மோட்டார் பைக் போட்டி, அதைத் தொடர்ந்து, 10 கி.மீ. தூரம் ஓட்டம் என மூன்று போட்டிகளும் சேர்ந்திருக்கும். மொத்தம் 51.5 கி.மீ. தூரம் கடக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில், இப்போட்டிகள், 5150 என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்தியாவில் முதல் முறையாக இப்போட்டிகள் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வரும் 2026, ஜன.11ம் தேதி, சென்னை இசிஆரில் உள்ள எம்ஜிஎம் பீச் ரிசார்ட்டில் இப்போட்டிகள் கொடியசைத்து துவக்கப்பட உள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, அயன்மேன் இந்தியா நிறுவனத்தின் இந்திய தலைவர் தீபக் ராஜ் இடையில், இதற்கான புரிந்துணைர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.