லாஸ்ஏஞ்சலஸ்: 2028 ஒலிம்பிக் தொடரில் ஜூலை 12 முதல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2028 ஜூலை 20 மற்றும் 29ம் தேதிகளில் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
128 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் அரங்கேற்றப்பட்ட உள்ளது. இந்த ஒலிம்பிக்கிற்கான கிரிக்கெட் அட்டவணை கடந்த திங்கட்கிழமை வெளியானது. இறுதியாக 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் 2028ல் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 12 முதல் 29 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் டி20 வடிவத்தில் நடைபெறும். அனைத்து போட்டிகளும் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள பொமோனாவின் ஃபேர்லேக்கில் கட்டப்பட்ட தற்காலிக மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் மொத்தம் 6 சர்வதேச அணிகள் உலக அரங்கில் போட்டியிடும். தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களுக்காக அணிகளுக்கு இடையே போட்டி நடக்கும். நாக் அவுட் (பதக்கம்) போட்டிகள் ஜூலை 20 (பெண்கள்) மற்றும் 29 (ஆண்கள்) ஆகிய தேதிகளில் நடைபெறும்.
ஒவ்வொரு நாளும் இரண்டு போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிகள் இந்திய நேரப்படி முறையே இரவு 9.30 மணிக்கும் காலை 7 மணிக்கும் தொடங்கும். ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும். ஒரு அணியில் 15 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.