ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்ற ஜாம்பவான்: இந்தியா வருகிறார் உசைன் போல்ட்; கால்பந்து போட்டியில் பங்கேற்பு
பெங்களூரு: ஒலிம்பிக் ஓட்டப் போட்டிகளில் 8 தங்கம் வென்றுள்ள ஜமைக்கா வீரர் உசைன் போல்ட், இந்தியாவில் நடைபெற உள்ள கண்காட்சி கால்பந்து போட்டிகளில் பங்கேற்க, வரும் அக்.1ம் தேதி இந்தியா வருகை தருகிறார். உலகப்புகழ் பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் (39). இவர் ஒலிம்பிக் ஓட்டப்போட்டிகளில் 8 தங்கம் வென்றவர். சமீப காலமாக, உசைன் போல்ட் கால்பந்தாட்ட போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், கால்பந்து போட்டிகளில் ஆடுவதற்கான பயற்சி பெற்ற அவர் நட்பு ரீதியிலான போட்டிகளில் ஆடி வருகிறார். சில சமயங்களில் அதிவிரைவாக ஓடி கோல்களை போட்டு அசத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்தியாவில் பூமா நிறுவனம் வரும் செப். 30ம் தேதி மற்றும் அக்.1ம் தேதி இரு நாள் விளையாட்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கண்காட்சி கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பாலிவுட் சினிமா பிரபலங்கள், பிற துறைகளில் புகழ் பெற்று விளங்குவோர் பங்குபெற உள்ளனர். அவர்களில் ஒருவராக, உசைன் போல்டும் கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார். பெங்களூரு எப்சி அணியும், மும்பை சிட்டி எப்சி அணியும் மோதும் அந்த போட்டிகளில் பங்கேற்க, உசைன் போல்ட், வரும் அக்.1ம் தேதி இந்தியா வருகை தருகிறார். போட்டியின் ஒரு பாதியில் பெங்களூரு எப்சி அணிக்காகவும், அடுத்த பாதியில் மும்பை எப்சி அணிக்காகவும், உசைன் போல்ட் ஆடுவார் என பூமா நிறுவன நிர்வாகி தெரிவித்தார்.