வீடு தேடி பழைய பொருட்கள் சேகரிப்பு; ஒரேநாளில் 45.64 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி அசத்தல்
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் சராசரியாக 6,500 மெட்ரிக் டன் திடக்கழிவுகளும், 1,000 மெட்ரிக்டன் கட்டிடம் மற்றும் கட்டுமான இடுப்பாட்டு கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் மாநகரை சுத்தமாக வைத்திடும் வகையில் சாலைகள், தெருக்கள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், பாலங்கள் மயான பூமிகள் உள்ளிட்ட பொது இடங்களில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தீவிர தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் குப்பை மட்டுமல்லாது, தங்களது வீட்டில் உள்ள பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகளை பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்கும் விதமாகவும், மக்களுக்கு இதன் காரணமாக ஏற்படும் இடையூறு மற்றும் சுகாதாரச் சீர்கேடுகளை தவிர்த்திடும் விதமாகவும், தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டிய தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளுக்கே சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை அகற்றிடும் புதிய நடவடிக்கை தொடங்கி உள்ளது.
1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் 145 பேரிடம் வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று ஒருநாள் மட்டும் 45.64 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது. இப்பணியில் 62 வாகனங்களும், 200க்கும் மேற்பட்ட பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும். அல்லது, மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கோ, 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.
இதன் அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள் பதிவு செய்தவரின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாக சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து, பாதுகாப்பாகவும் அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.