*நடனமாடி மக்கள் உற்சாகம்
கூடலூர் : கூடலூரில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய புத்தரிசி திருவிழா புத்தூர் வயல் பகுதியில் கதிர் அறுவடையுடன் தொடங்கியது. நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மவுண்டாடன் செட்டி மற்றும் ஆதிவாசி இன மக்கள் நம்போலக்கோட்டையில் உள்ள வேட்டைக்கொரு மகன் என அழைக்கப்படும் சிவனை பொது குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த பூர்வ குடிமக்கள் பிரதானமாக நெல் விவசாயம் செய்து வருகிறார்கள். பயிர்களை வனவிலங்குகளிடமிருந்தும், இயற்கை இடர்களில் இருந்தும் பாதுகாக்க முதல் பால் கதிரை ஐப்பசி 10ம் நாளில் பனியர் இன பழங்குடியின மக்கள் ஊர்வலமாக சென்று வேட்டைக்கொரு மகனுக்கு படைப்பது வழக்கம்.
அதன்படி, நேற்று விரதம் இருந்த மூத்த பனியர் இன பழங்குடியின மக்கள் புத்தூர் வயல் பகுதியில் உள்ள தரமான கதிர்கள் விளைந்த நெல் வயலை தேர்வு செய்து பாரம்பரிய வாத்திய கருவிகளை இசைத்து நடனமாடி பால் கதிர்களை அறுவடை செய்தனர்.
பின்னர், நெல் கதிர் கட்டுகளை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்து அவர்களது குலதெய்வ முறைப்படி வழக்கமான இடத்தில் வைத்து பூஜை செய்து அதனை பிரித்து 3 கட்டுகளாக மாற்றினர். சிறிய கதிர் கட்டுகள் இரண்டை புத்தூர் வயல் விஷ்ணு ஆலயத்திற்கும், மற்றொரு கட்டை மங்குழி பர தேவதை ஆலயத்திற்கும் அனுப்பி வைத்தனர். மீதமுள்ள பெரிய கட்டை நம்போலக்கோட்டை சிவன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
கோவில் வளாகத்திற்கு முன்பாக பாரம்பரிய இசை முழங்க அங்கு காத்திருந்தவர்கள் பழங்குடியின மக்களிடம் இருந்து கதிர் கட்டுகளை பெற்று சிவனுக்கு படையலிட்டனர். படைலிட்ட பால் கதிர்கள் அங்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த பிரசாதத்தை வீடுகளுக்கு கொண்டு செல்லும் பழங்குடியின மக்கள் தொடர்ந்து தங்களது கிராமங்களில் உள்ள குலதெய்வங்களுக்கு கதிர் பூஜை நடத்தி அறுவடை செய்கிறார்கள். இதில் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். பருவமழையால் குடைபிடித்தபடி கதிர் அறுவடை பணி நடந்தது.
