பழைய, புதிய எதிரிகள் யார் வந்தாலும் திமுகவை தொட முடியாது: கொள்கையில்லாத கூட்டத்தை சேர்த்து கும்மாளம் போடும் இயக்கம் அல்ல; முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
சென்னை: கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. பழைய எதிரிகள்-புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எக்கு கோட்டையை தொட்டு கூட பார்க்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெரியார் பிறந்தநாள்-தமிழ்த்தாயின் தலைமகன் அண்ணா பிறந்தநாள். பெரியாரின் லட்சியங்களை வென்றெடுத்திட அண்ணாவால் நம் இதயத்துடிப்பான திமுக தொடங்கப்பட்ட நாள்-இந்த மூன்றும் நிகழ்ந்தது செப்டம்பர் மாதம் என்பதால் முப்பெரும் விழாவாக -உடன்பிறப்புகளின் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தைத் தொடங்கியவர் கலைஞர். முப்பெரும் விழா என்பது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா. அரிமா நோக்கு போல 75 ஆண்டுகால திமுகவின் வரலாற்றுத் தடத்தைப் பெருமிதத்துடன் திரும்பிப் பார்த்து, உன்னத லட்சியப் பயணத்தைத் தொய்வின்றி தொடர்வதற்கான பாசறை. பழைய எதிரிகள்-புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எக்குக் கோட்டையைத் தொட்டு கூட பார்க்க முடியாது என்று உங்களில் ஒருவனான நானும், என்னுள் கலந்திருக்கும் உடன்பிறப்புகளான நீங்களும் சூளுரைக்கும் திருநாள்.
கலைஞரை இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்த பிறகு, திமுகவின் தலைமைப் பொறுப்பை உங்களில் ஒருவனான நான் ஏற்றுக்கொண்டது முதல், சென்னைக்கு வெளியே ஏதேனும் ஒரு மாவட்டத்தில் முப்பெரும் விழாவைக் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு 2025 செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டி எனும் இடத்தில் முப்பெரும் விழா எனும் கொள்கைத் திருவிழா நடைபெற இருக்கிறது. எதைச் செய்தாலும் எல்லாரும் அதிசயிக்கும் வகையில் பிரமாண்டமாகவும், ‘இப்படியும் செய்ய முடியுமா?’ என்ற நேர்த்தியுடனும், ’இவரால்தான் இது முடியும்’ என்று அனைவரின் பாராட்டையும் பெறும் வகையிலும் செயல்படக்கூடிய கரூர் மாவட்ட திமுக செயலாளர்-மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி இரவும் பகலும் ஓய்வின்றி விழா ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். ஒவ்வொரு கட்டத்தின் முன்னேற்றத்தையும் என்னிடம் காண்பித்து, ஒப்புதலும் ஆலோசனைகளும் பெற்று நிறைவேற்றி வருகிறார்.
செப்டம்பர் 17 மாலை 5 மணியளவில் தொடங்கும் முப்பெரும் விழாவுக்கு திமுகவின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். பொருளாளர்- திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். இந்த லட்சிய விழாவில் பெரியார் விருது திமுகவின் துணை பொதுச்செயலாளர்-திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர்-இந்திய நாடாளுமன்றத்தில் பெரியாரின் பெண்ணியக் குரலாக இன எதிரிகளை நடுங்கவைக்கும் கனிமொழி எம்.பி.க்கு வழங்கப்பட இருக்கிறது. அண்ணா விருது திமுகவின் மூத்த முன்னோடி-தணிக்கைக்குழு உறுப்பினர்-பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர்-அண்ணா காலத்திலிருந்து கட்சி பணியாற்றி வரும் சுப.சீதாராமனுக்கு வழங்கப்படுகிறது. கலைஞர் விருது கழகத்தின் நூறு வயது தொண்டர்-அண்ணாநகர் தொகுதி இடைத்தேர்தலில் அன்றைய ஆளுங்கட்சியின் சதிகளை முறியடித்து வென்ற வீரர் - அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளர்-சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சோ.மா.ராமச்சந்திரனுக்கு வழங்கப்படுகிறது.
பாவேந்தர் பாரதிதாசன் விருது திமுக மூத்த முன்னோடி-தலைமைச் செயற்குழு உறுப்பினர் - மிசா காலத்தில் தலைவர் கலைஞருக்கு உறுதுணையாக நின்று திமுகவை கட்டிக்காத்த குளித்தலை சிவராமனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக அவர் நம்மை விட்டுப் பிரிந்து துயரத்தில் ஆழ்த்தினாலும், என்றும் நினைவில் வாழும் அந்த மாவீரரின் தியாகத்தைப் போற்றி அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்பட இருக்கிறது. பேராசிரியர் விருது திமுக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர், சட்டப்பேரவை முன்னாள் கொறடா-திமுக செயல்மறவர் மருதூர் ராமலிங்கத்துக்கு வழங்கப்படுகிறது. உங்களில் ஒருவனான என் பெயரிலான மு.க.ஸ்டாலின் விருது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளர்-எந்நாளும் திமுக பணியைத் தொய்வின்றி ஆற்றும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் ந. பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது.
முப்பெரும் விழா நிகழ்வுகளில் முத்தாய்ப்பாக தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கழகப் பணியைச் சிறப்பாகச் செய்து வருபவர்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நற்சான்றிதழும் பணமுடிப்பும் வழங்கப்படும். முரசொலி அறக்கட்டளை சார்பில், தலைவர் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டு-என் அரசியல் பணிகளில் ஆலோசகராகவும் ஆசானாகவும் திகழ்ந்தவரும்-என்றும் நம் நெஞ்சில் வாழ்பவருமான முரசொலி செல்வம் பெயரிலான முதல் விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்றும்படி தலைமைக் கழகம் உங்களில் ஒருவனான என்னைப் பணித்துள்ளது.
நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லா கழகப் பணிதான். உடன்பிறப்புகளான உங்களிடம் எதிர்பார்ப்பதும் அத்தகைய பணிகளைத்தான். கரூரில் செப்டம்பர் 17ம் நாள் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவில் அலைகடலென ஆர்ப்பரித்து உடன்பிறப்புகளாகிய நீங்கள் கூடுவீர்கள் என்பதும், உங்கள் முகம் கண்டு நான் உற்சாகம் பெறுவேன் என்பதும் உறுதியானது. அதுபோலவே செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து, \\”தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்\\” என உறுதி ஏற்கிறோம்.
கலைஞர் 5 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து, இன்று நாம் காணும் நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்துத் தந்தார். இடையில் ஒரு சில முறை தமிழ்நாட்டு அரசியலில் விபத்து ஏற்பட்டு, ஆட்சி மாற்றத்தினால் மாநிலத்தின் வளர்ச்சி படுபாதாளத்திற்குச் சென்ற நிலையில், கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு இலக்குகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. ஒன்றிய பாஜ அரசின் வஞ்சகத்தாலும், அதனிடம் அடிமையாக இருக்கின்ற அதிமுகவின் துரோகத்தாலும் நாம் இழந்தவற்றை மீட்கும் முயற்சியில் கடந்த நான்காண்டுகளில் பெருமளவு முன்னேறியுள்ளோம்.
பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்திலான வளர்ச்சி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் உயர்ந்த நிலை, மருத்துவத்துறையில் மக்களின் நலன் காக்கு சிறந்த கட்டமைப்பு, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற மாநிலம், பெண்களின் முன்னேற்றத்திற்கும் தற்சார்பு நிலைக்கும் வழிவகுக்கும் மாநிலம் என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே தமிழ்நாட்டின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் அளவுக்கு திராவிட மாடல் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அண்மையில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த நிலையில், அங்கு வாழும் தமிழர்கள் நம் மாநிலத்தின் நிலைகண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தனர்.
உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாக திமுக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும். கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து லட்சிய வீரர்களாகப் புறப்படுவோம். அண்ணா போதித்த கட்டுப்பாட்டை கலைஞர் கட்டிக்காத்து, இன்று உங்களில் ஒருவனான என் தலைமையிலும் அதே கட்டுப்பாட்டுடன் கொள்கைக் கூட்டமாக உடன்பிறப்புகள் திரள்வதை கரூரிலும் காண இருக்கிறேன்.
லட்சிய வீரர்களாக 2026 தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் இந்த முப்பெரும் விழா. இருவண்ணக் கொடியேந்தி கொள்கைக் குடும்பமாக அணிதிரள்வீர்! லட்சியத்தை நெஞ்சில் ஏந்தி, பாதுகாப்பாக திரும்பிச் செல்வீர். பெரியார் அண்ணா - கலைஞர் புகழ் நிலைக்கட்டும்! கழகத்தின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கலைஞர் 5 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து, இன்று நாம் காணும் நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்துத் தந்தார். கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு இலக்குகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.