பழைய பகையை ஒதுக்கி வையுங்கள் மத்திய கிழக்கில் நல்லிணக்கம் மலர்வதற்கான புதிய சகாப்தம்: காசாவின் எதிர்காலம் குறித்த மாநாட்டில் அதிபர் டிரம்ப் பேச்சு
ஷர்ம் எல் ஷேக்: இஸ்ரேல், காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டாக நடந்த போர், அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இதையொட்டி, இஸ்ரேல் சென்ற டிரம்ப் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நடந்த காசாவின் எதிர்காலம் குறித்த உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
இம்மாநாட்டில் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கை சேர்ந்த நாடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய டிரம்ப், ‘‘பழைய பகையையும் கசப்பான வெறுப்புகளையும் ஒதுக்கி வைக்க வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு தற்போது நமக்கு கிடைத்துள்ளது.
நமது எதிர்காலம் கடந்த தலைமுறைகளின் சண்டைகளால் வழிநடத்தப்படக் கூடாது. மீண்டும் காசாவை மறுகட்டமைப்பு செய்ய அமெரிக்கா உதவி செய்யும்’’ என்றார். இதற்கான ஆவணத்தில் டிரம்புடன் துருக்கி, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். முன்னதாக, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய டிரம்ப், ‘‘ மத்திய கிழக்கில் நல்லிணக்கம் மலர்வதற்கான புதிய சகாப்தம் இது’’ என்றார்.