Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழைய பகையை தீர்ப்பதற்காக தேனிக்காரரை வெளியேற்றிய அல்வா ஊர் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கனிம வள லாரிகளுக்கு செக் வைத்த காக்கி உயர் அதிகாரியின் உத்தரவை சாதகமாக்கி காக்கிகள் வசூல் செய்வது கொதிப்பை ஏற்படுத்தி இருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில், தற்போதுள்ள காக்கி உயர் அதிகாரி கனிம வள லாரிகள் விவகாரத்தில் ரொம்ப கறாராக இருக்கிறாராம்.. இதனால மாவட்டத்துக்குள் வந்த டாரஸ் லாரிகளின் எண்ணிக்கை பாதிக்கு, பாதி குறைஞ்சு போச்சாம்.. அந்தளவுக்கு கெடுபிடி காட்டி முறைகேடாக வந்த கனிம வள லாரிகளுக்கு செக் வைத்துள்ளாராம்..

ஆனால் காக்கி உயர் அதிகாரியின் இந்த உத்தரவை சாதகமாக்கி காக்கிகள் சிலர் காசு பார்க்க ஆரம்பிச்சு இருக்கிறார்களாம்.. குறிப்பாக மாவட்ட தலைநகரில் இது ரொம்ப ஓவராக இருக்கிறதாம்.. மாநகராட்சி மற்றும் அரசின் கட்டுமான பணிக்கு டெம்போவில் வருவதை மடக்கி பிடித்தும் காக்கிகள் சிலர் தரப்பில் வசூல் வேட்டை நடக்காம்.. இதுல கந்த கடவுள் பெயரை கொண்ட ஒரு போலீஸ்காரர் ரொம்ப கறாராக வசூலிக்கிறாராம்.. வேலை முடிஞ்சு வீட்டுக்கு போகும்போது கூட, நான்கு வழிச்சாலையில் தனக்கான சீருடையில் நின்று வசூலித்து விட்டுதான் செல்கிறாராம்..

இதனால அரசு, மாநகராட்சிக்கான கட்டுமான பொருட்கள் கொண்டு வருகிறவர்கள் கொதித்து போய் இருக்கிறார்களாம்.. விரைவில் காக்கி உயர் அதிகாரியை சந்தித்து முறையிட இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சின்ன மம்மியின் அரசியல் வாழ்வு ஜொலிக்கும் என்ற ஜோசியரின் உத்தரவை கேட்டு போயஸ் கார்டன் பங்களா ஹாலில் மாற்றம் செய்யப்படுதாமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவியான மம்மி மறைவுக்கு பிறகு, சின்ன மம்மியின் கைக்கு எட்டும் தூரத்தில் சி.எம். பதவி இருந்துச்சாம்.. இதற்காக அவர் இரவோடு இரவாக ஸ்டைலான உடைகளை அணிந்து தயாராக இருந்தாராம்.. இலைக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் நீங்கள் தான் முதல்வர், பொதுச்செயலாளர் பதவி உங்களுக்கே சொந்தம் என கைகட்டி வாய்பொத்தி கோஷமிட்டாங்களாம்... ஆனால் மலராத கட்சியின் டெல்லி தலைமையோ, பொறுப்பு ஆளுநரை சென்னைக்கு அனுப்பாமல் அங்கேயே நிறுத்தி வைத்ததுடன், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை சொல்ல சொல்லிட்டாங்களாம்...

இதனால் சின்ன மம்மியின் கனவு கலைந்துபோனதுடன், பெங்களூரு சிறைக்கும் சென்றாராம்... அந்நேரத்தில் தான் தற்போதைய இலைக்கட்சி தலைவரை சி.எம். ஆக்கினாராம்.. அவர் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வருவதற்குள், சின்ன மம்மியை எல்லோரும் மறந்துட்டாங்களாம்... ஆனால் கட்சிக்கு நான் தான் பொதுச்செயலாளர் என்ற எண்ணத்துடன் சின்ன மம்மி ரவுண்டு போய்கிட்டிருக்காங்களாம்.. இதற்கிடையில் கட்சி நான்காக சிதறுண்டு போனதாம்...

என்றாலும் ஆதரவுக்கு யாரும் இல்லாத நிலையில் கட்சி ஒன்றாக இணையும் என்ற உறுதியோடு இருக்காங்களாம் சின்னமம்மி. அதே நேரத்தில் கட்சி ஒருங்கிணையும் நேரம் நெருங்கி விட்டதுடன், சின்ன மம்மி பொதுச்செயலாளர் பதவியை இன்னும் 20 நாளில் பிடிப்பார் என அவரது நெருங்கிய அடிப்பொடிகள் அடிச்சி சொல்றாங்க... மெகா கூட்டணி அமைப்பேன் என்ற இலைக்கட்சி தலைவருடன் யாரும் இணையலையாம்.. கூட்டி கழித்து பார்த்தால் லட்டர்பேடு கட்சிகள் தான் கூட்டணியில் இருக்காங்களாம்...

வரும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற எண்ணம் இலைக்கட்சி தலைவர் மனதில் உதித்து விட்டதாம்.. இந்த நேரத்தில் தான் சின்ன மம்மியின் தம்பியும் தனிக்கட்சி தொடங்கி நடத்தியவர் உள்ளே புகுந்தாராம்.. அவரது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாம்.. கட்சிக்கு பொதுச்செயலாளர் சின்ன மம்மியாம்.. முதல்வர் வேட்பாளராக இலைக்கட்சி தலைவர் என்பதுதானாம் அந்த முடிவு.. இதற்கு இலைக்கட்சி தலைவர் சம்மதம் தெரிவித்து விட்டதாக சின்ன மம்மியின் அடிபொடிகள் சொல்றாங்க..

அதே நேரத்தில் போயஸ் கார்டனில் சின்ன மம்மி பிரமாண்டமான பங்களா ஒன்றை கட்டி திறந்தாராம்.. மாடியில் 300 பேர் அமரும் வகையில் பிரமாண்டமான ஹால் ஒன்று இருக்குதாம்.. அதில் சில மாற்றங்களை செய்தால் அரசியல் வாழ்வு ஜொலிக்கும் என ஜோசியர் சொன்னாராம்.. இதனால் அந்த ஹாலை மாற்றும் வேலைகள் ஜரூராக நடந்து வருதாம்.. இன்னும் 20 நாளில் பிரிந்தவர்கள் எல்லோரும் ஒருங்கிணைவோமுன்னு சின்ன மம்மி தரப்பினர் ரொம்பவே உற்சாகமாக சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பழைய பகையை தீர்ப்பதற்காகவே சேலம்காரருடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேனிக்காரரை வெளியேற்றி விட்டாராமே அல்வா ஊர் எம்எல்ஏ..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரருடன் தனக்கு இருந்த பழைய பகையை தீர்த்துக் கொண்டாராமே அல்வா ஊரின் எம்எல்ஏ. அதாவது அல்வா ஊரின் எம்எல்ஏ இலை கட்சியில் இருந்தவர். இவர் 2001ம் ஆண்டு அல்வா தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு அமைச்சரானவர்.. போக்குவரத்து, மின்சாரம், தொழில்துறை என அடுத்தடுத்து முக்கிய துறைகளை கவனித்தவர்.

ஆனால் 2011ல் மீண்டும் அல்வா தொகுதியில் வெற்றி பெற்ற அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கனவு நனவாகிப் போனது.. பல்வேறு முறை மம்மி அமைச்சரவையை மாற்றி அமைத்த போதும் அல்வா ஊரின் எம்எல்ஏ தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என ஆசைஆசையாக எதிர்பார்த்தாராம்.. ஆனால் அவரது ஆசை கடைசி வரை நிராசையாகி விட்டதாம்.. தனக்கு அமைச்சர் பதவி கிடைப்பதை தேனிக்காரர் தான் குறுக்கே புகுந்து கெடுத்து விட்டார் என்பது அல்வா ஊர் எம்எல்ஏவின் எண்ணமாம்.. தேசிய கட்சியில் சேர்ந்த பிறகு அல்வா ஊரில் நடந்த ஒரு கூட்டத்தில் தேனிக்காரரை துரோகி என காட்டமாக வர்ணித்தார்..

தற்போது அல்வா ஊரின் எம்எல்ஏ தேசிய கட்சியின் மாநில தலைவராகி விட்ட நிலையில், கூட்டணியை முடிவு செய்யும் நிலைக்கு உயர்ந்து விட்டார். அதனால் சேலம்காரருடன் மட்டும் கூட்டணி வைத்துக் கொண்டு தனது பழைய பகையை தீர்ப்பதற்காக சாதுர்யமாக தேனிக்காரரை வெளியேற்றி விட்டாராம்.. இதன் மூலம் இருவருக்கும் கருத்து மோதல்கள் எழுந்துள்ள நிலையில், சின்ன மம்மி, குக்கர் காரர், தேனிக்காரர் ஆகிய மூவர் கைகோர்த்து அல்வா ஊரின் எம்எல்ஏக்கு பாடம் கற்பிக்க தயாராகி வருகின்றனராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.