சென்னை : ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையில் நடைபெற்று வரும் பணிகள் 80% நிறைவடைந்துள்ளன என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி, வெள்ளப் பாதிப்புகளைத் தாங்கும் வகையிலும் அதன் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தவும், ஒக்கியம் மடுவு பாலத்தின் விரிவாக்கப் பணிகளை சீராக மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் 2023-இல் மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து, அதிக மழைப்பொழிவைதாங்கும் திறன் இல்லாத நிலையில் உள்ள தற்போதைய ஒக்கியம் மடுவு பாலத்தில் நீர்வழிப்பாதை தற்போதுசுமார் 90 மீட்டர் நீளமும், அதன் உயரமும் குறைவாகவே உள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு மற்றும் நீர்வளத் துறையுடன் கலந்தாலோசித்த பிறகு, நீர்வழிப்பாதையை 205 மீட்டர் நீளத்திற்கும், கூடுதலாக 1.5 மீட்டர் உயர இடைவெளியுடனும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
தற்போது நடைபெறும் பணிகளின் முன்னேற்றம்;
பாலத்தின் அமைப்பு: தற்போதுள்ள பாலத்தின் மேல்புற மற்றும் கீழ்ப்புறப் பகுதிகளில், மூன்று 40 மீட்டர் நீளத்தில் ஸ்டீல் பாலத்தின் கட்டுமானப் பணிகளும், அதன் மேல் தளத் தகடுகளை அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட நீர்வழிப்பாதை: 90 மீட்டராக இருந்த நீர்வழிப் பாதை, இப்போது 120 மீட்டராக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகள் நிறைவு பெற்றவுடன், பாலத்தின் முழு அகலம் சுமார் 205 மீட்டர் ஆகும். நீர்வழிப்பாதையை சீர்செய்தல்: பாலத்தின் மூன்று நீர்வழிப்பாதையும் கட்டி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்காலிகமாகப் போடப்பட்ட மண் மேடு அகற்றப்பட்டது. இப்போது, பாலத்தின் மேல்பக்க நீர்வழிப்பாதை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கீழ்ப்புற நீர்வழிப்பாதையில் 80% பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பகுதிகள் செப்டம்பர் 8 முதல் 10, 2025-க்கு இடையில் சுத்தம் செய்யப்படும்.
அடுத்தக்கட்ட திட்ட பணிகள்:
* பாலங்கள் அமைக்கும் பணிகள் இருபுறமும் நடைபெற்று வருகின்றன.
* பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டதும், புதிய பாலம் பொது பயன்பாட்டிற்காக தற்போதைய சாலையுடன் இணைக்கப்படும்.
ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையில் நடைபெற்று வரும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், பொது மேலாளர் (வழித்தடம்) சி. செல்வம், மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், ஆய்வின்போது கூறியதாவது: ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதை திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டு, பருவமழைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் இரவு பகலாகப் பணியாற்றி வருகிறோம். தற்போதுள்ள ஒக்கியம்மடுவின் நீர்வழிப்பாதையை அடித்தள நிலை வரை சரிசெய்யும் பணியில் குழு கவனம் செலுத்தி வருகிறது. இந்தப் பணிகள் முடிந்ததும், இந்த பாலம் நீரின் ஓட்டத்தை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும். மேலும், அருகிலுள்ள பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைத்து, பள்ளிக்கரணை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள பாதிப்புகளிருந்து தீர்வை அளிக்கும். என்று கூறினார்.