Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரூ.8428.50 கோடியில் 3ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்: செயல்படுத்த அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவினை நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதமும், பேரூராட்சிகளுக்கு 70 லிட்டர் வீதமும் மற்றும் ஊரக பகுதிகளுக்கு 55 லிட்டர் வீதமும், உயர்த்தி வழங்கும் வகையில், 304.83 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் பொருட்டு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்-3ம் கட்டம் செயல்படுத்தபடும் என்று அறிவித்தார்.

அதன்படி, இத்திட்டத்திற்கு தேவையான நீரினை காவிரியாற்றில், ஒகேனக்கலில் அமையவிருக்கும் தலைமையிடத்தில் இருந்து, யானைபள்ளம் மற்றும் கனவாய் நீருந்து நிலையங்களின் வழியாக, ​20.20 கி.மீ தொலைவில் பருவதனஹள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் 242.50 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படவுள்ளது. ​​பின்னர், பருவதனஹள்ளியில் அமையவுள்ள 157.25 லட்சம் லிட்டர் நீர் சேமிப்பு தொட்டியில் இருந்து, குழாய்கள் மூலம் 32 அழுத்த விசைத்தொட்டிகள், 324 முதன்மை சமநிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் 598 தரைமட்ட தொட்டிகளில் நீர் சேகரிக்கப்படும்.

அங்கிருந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் 1009 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு; அதன்மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு ரூ.8428.50 கோடி. 11 தொகுப்புகளாக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் முதல்கட்டமாக தொகுப்பு-2A மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசகருக்கான ஒப்பந்தப்புள்ளி கோர கொள்கை அளவில் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் ஒசூர் மாநகராட்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,802 ஊரக குடியிருப்புகளைச் சார்ந்த 38.81 லட்சம் மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்கப்படும்.