Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70,000 கனஅடியாக அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது: கரையோரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம், 10 அடி உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு, நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மற்ற அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து, தற்போது விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் மாலை, நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மெயினருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தவாறு தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. போலீசார், ஊர்க்காவல் படையினர், அப்பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

அதே சமயம், கடந்த 5 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 44,353 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை விநாடிக்கு 69,673 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் மாலை 56.90 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மாலை 65.10 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது. கடந்த 15ந்தேதி மாலை 44.62 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மாலை 65.10 அடியாக உயர்ந்தது. அதன்படி, கடந்த 5 நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 20.48 அடி உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 28.63 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, 4வது நாளாக மேட்டூர் நீர்த்தேக்க பகுதியான அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில், மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் வர வாய்ப்பு உள்ளதால் தர்மபுரி கலெக்டர் சாந்தி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஒகேனக்கல் பகுதியில் நேற்று ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இதேபோல் சேலம் கலெக்டர் பிருந்தா தேவி மேட்டூர் அணையில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அணையின் வலது, இடது கரை, உபரிநீர் வெளியேற்றம், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்தார். காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.